ஊராட்சியின் வரவு, செலவு கேட்டு மேல்நிலை குடிநீர் தொட்டியில் ஏறி கவுன்சிலர் தற்கொலை மிரட்டல்

கோவை: கோவை அருகே ஊராட்சியின் வரவு - செலவு கணக்கு கேட்டு மேல்நிலை குடிநீர் தொட்டியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த கவுன்சிலரால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள மருதூர் ஊராட்சியில் 12 வார்டுகள் உள்ளன. இங்கு பூர்ணிமா ரங்கராஜன் என்பவர் ஊராட்சி மன்ற தலைவராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று  மருதூர் ஊராட்சி மன்றத்தின் 1வது கவுன்சிலர் ரங்கதாதன் அலுவலகத்திற்கு வந்தார். அலுவலகத்தின் உள்ளே சென்று வந்த அவர் திடீரென அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள சுமார் 30 அடி உயரமுள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில் ஏறினார்.

கடந்த காலங்களில் நடைபெற்ற வரவு, செலவு கணக்குகள் குறித்த கோப்புகளை ஊராட்சி நிர்வாகம் காண்பிக்க மறுப்பதாக கூறி கோஷமிட்டவாறே அவர் தற்கொலை மிரட்டல் விடுத்தார். இச்சம்பவம் குறித்து அறிந்த காரமடை போலீசார் மற்றும் மேட்டுப்பாளையம் தீயணைப்புத் துறையினர், காரமடை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுடலை முத்து உள்ளிட்டோர் அங்கு வந்தனர். அவர்கள் தற்கொலை மிரட்டல் விடுத்த ரங்கநாதனுடன் சமரச பேச்சு நடத்தினர்.

இதில் உடன்பாடு ஏற்படவில்லை. கவுன்சிலர் கீழே இறங்க மறுத்தார். தீயணைப்புத்துறையினர் தண்ணீர் தொட்டியினை சுற்றிலும் வலைகளை விரித்தனர். பின்னர் உயர் அதிகாரிகள் நடத்திய  பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டது. இதையடுத்து சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் கவுன்சிலர் ரங்கநாதன் கீழே இறங்கி வந்தார். அவரை அழைத்து வந்து அலுவலகத்தில் அமர வைத்து ஊராட்சியின் வரவு, செலவுகளை காண்பித்தனர். இதன் பிறகே அவர் சமாதானமடைந்தார்.

Related Stories:

>