பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசியை குழந்தைகளுக்கு செலுத்துவதற்கான 2ம் கட்ட பரிசோதனை நிறைவு..!!

டெல்லி: பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசியை குழந்தைகளுக்கு செலுத்துவதற்கான 2ம் கட்ட சோதனை நிறைவடைந்துள்ளது. கொரோனாவால் குழந்தைகள் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ள நிலையில், மூடிக்கிடக்கும் பள்ளிகளையும் திறக்க வேண்டியிருப்பதால் குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்துவது கட்டாயமாகிறது. கடந்த ஆண்டு தொடங்கிய கொரோனா பரவலின் இரண்டாம் அலை கொடிய பாதிப்பையும், அதிக உயிரிழப்புகளையும் ஏற்படுத்திய நிலையில் தற்போது தான் கட்டுக்குள் வந்துள்ளது. ஒரு சில மாதங்களில் 3ம் அலை பரவல் தொடங்கும் என்பதும், அது குழந்தைகளுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதே வல்லுநர்கள் விடுத்துள்ள எச்சரிக்கையாக உள்ளது.

இந்நிலையில் தற்போது குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசியை செலுத்துவதற்கான 2ம் கட்ட சோதனை நிறைவடைந்திருக்கிறது. 2 முதல் 18 வரையுள்ள குழந்தைகளுக்கு பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசி செலுத்துவதற்கான சோதனை நடந்து வருகிறது. ஐதராபாத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாரத் பயோடெக் நிறுவன நிர்வாக இயக்குனர் கிருஷ்ணா, செப்டம்பர் மாதத்தில் 3 கோடியே 50 லட்சம் தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும், அக்டோபர் மாதத்தில் இந்த உற்பத்தி 5 கோடியே 50 லட்சமாக அதிகரிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்தின் சோதனை அடுத்த மாதம் நிறைவடைய உள்ளதாகவும் 2 முதல் 18 வரையுள்ள குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்துவதற்கான 2ம் கட்ட பரிசோதனை நிறைவடைந்துள்ளதாகவும் கிருஷ்ணா கூறினார். இந்த பரிசோதனை முடிவுகள் அடுத்த வாரம் அரசிடம் ஒப்படைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Related Stories:

>