ஆற்காடு அருகே கள்ளக்காதல் ஜோடி மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை

ஆற்காடு: ஆற்காடு அருகே கள்ளக்காதல் ஜோடி மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது. ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த காவனூர் அருகே உள்ள வெங்கடாபுரம் கொட்டாப்புளி சந்தை பகுதியை சேர்ந்தவர் பாரதி (35), கட்டிட மேஸ்திரி. இவருக்கு திருமணமாகி 4 மற்றும் 3 வயதில் 2 மகள்கள் உள்ளனர். காவனூர் அடுத்த புங்கனூரில் வசித்து வருபவர் ராஜேந்திரன் மனைவி சரிதா (34). இவர்களுக்கு 1 மகன், 1 மகள் உள்ளனர். சரிதா, கட்டிட சித்தாளாக வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் பாரதியும், சரிதாவும் ஒரே இடத்தில் கட்டிட வேலைக்கு சென்று வந்ததால் இவர்களிடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதையறிந்த இவர்களது குடும்பத்தினர் இருவரையும் கண்டித்துள்ளனர். இருப்பினும் இருவரும் கள்ளத்தொடர்பை கைவிடவில்லையாம். கடந்த 2 நாட்களாக பாரதியும், சரிதாவும் திடீரென மாயமானார்கள். அவர்களை குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் காவனூர் அருகே உள்ள புங்கனூர் வெள்ளக்குளம் மலையடிவாரத்தில் உள்ள ஒரு மரத்தில் ஆண், பெண் சடலங்கள் ஒரே சேலையில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடப்பதை இன்று காலை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்தனர். இதில் சடலமாக கிடந்தவர்கள் காணாமல் போன பாரதி மற்றும் சரிதா என்பதும் கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு ஏற்பட்டதால் தற்கொலை செய்திருக்கலாம் எனவும் தெரிந்தது.

இதையடுத்து சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக திமிரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>