தூத்துக்குடி அருகே அதிகாலை காரில் வெடி வெடித்து பயங்கர விபத்து: 30க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே இன்று அதிகாலை காரில் வைத்திருந்த பட்டாசு வெடித்து கார் நொறுங்கியது. அருகில் இருந்த 30க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள இடைச்சிவிளை குமரன்விளையைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (48). இவர் அரசு அனுமதி பெற்று திசையன்விளை அருகே அணைக்கரையில் வாணவெடி மற்றும் கல்வெடி தயாரிப்பு கூடம் நடத்தி வருகிறார். திருமணம் மற்றும் கோவில் விழாக்களுக்கு ஆர்டரின் பேரில் பட்டாசு தயாரித்து அதனை காரில் கொண்டு ெசன்று வழங்குவது வழக்கம்.

இந்நிலையில் திருமண விழாவுக்கு வழங்குவதற்காக ரூ.30 ஆயிரம் மதிப்பிலான வாண வெடிகளை குடோனில் இருந்து காரில் ஏற்றிக்கொண்டு இன்று அதிகாலை 2 மணி அளவில் சாத்தான்குளம் அருகேயுள்ள இடைச்சிவிளையில் உள்ள தனது வீட்டிற்கு சென்றார். ரிமோட் மூலம் கார் கதவை மூடிய நிலையில் வீட்டுக்கு சென்றார். பின்னர் சிறிது நேரத்தில் கார் கதவு, பூட்டப்பட்டு உள்ளதா? என்பதை சோதனை செய்யும் வகையில் வீட்டின் வாசல் அருகே இருந்தவாறு ரிமோட்டை இயக்கி சோதனை செய்ததாக கூறப்படுகிறது. அப்போது வீட்டின் வெளியே நிறுத்தியிருந்த காரில் வைத்திருந்த வாண வெடிகள், திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

இதில் காரும் வெடித்து கார் பாகங்கள் சிதறின. கார் டயர், என்ஜின் மற்றும் உதிரி பாகங்கள் நொறுங்கின. இந்த சம்பவத்தில் பாலகிருஷ்ணனுக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது.

அதிகாலை நேரத்தில் கார் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதால் அப்பகுதிகளில் உள்ள சுமார் 30க்கும் மேற்பட்ட வீடுகளின் சுவர்களில் வெடிப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து வீட்டில் தூங்கி கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து வெளியே ஓடி வந்தனர். அதன்பின்னர் தான் அருகில் உள்ள வீட்டில் கார் வெடித்து சிதறியிருப்பது தெரியவந்தது.

தகவல் அறிந்து எஸ்பி ஜெயக்குமார், சாத்தான்குளம் டிஎஸ்பி கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பாலகிருஷ்ணன், அரசு அனுமதி பெற்று வாண வெடி தயாரித்து வந்தபோதிலும், அனுமதியின்றி வாண வெடிகளை காரில் கொண்டு வந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிந்து வாண வெடி தயாரிப்பாளர் பாலகிருஷ்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெடி விபத்தில் அவர் காயம் அடைந்துள்ளதால் அவருக்கு சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர் சம்பவம்

கைதான பாலகிருஷ்ணன், சில ஆண்டுகளுக்குமுன் சாத்தான்குளம் அருகே இடைச்சிவிளையில் வாண வெடி தயாரித்து வந்தார். அப்போது வெடி தயாரிப்பு குடோனில் விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து தற்போது திசையன்விளை அருகே அணைக்கரையில் வாணவெடி குடோனை இடமாற்றம் செய்திருந்தார். இதேபோல் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் சாத்தான்குளம் அருகே விஜயராமபுரத்தில் வாண வெடி தயாரிப்பு குடோனில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் நடந்துள்ளது.

திருச்செந்தூர் முக்காணியிலும் கடந்த 7 ஆண்டுக்குமுன் வாண வெடி தயாரிப்பு கூடத்தில் விபத்து நடந்துள்ளது. வாண வெடி தயாரிப்பு கூடங்களில் தொடர்ந்து விபத்துகள் நடந்து வருவதால் அதற்கான விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories:

>