நெடுஞ்சாலைத்துறை சார்பில் மழைநீர் வடிகால்வாய் தூர்வாரும் பணி

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், வடகிழக்கு பருவ மழை காலங்களில் அதிகம் பாதிக்கக்கூடிய பகுதிகளான சென்னை வேப்பேரி, கத்திபாரா, ஈக்காட்டுதாங்கல், கோயம்பேடு, ரெட்டேரி, அரும்பாக்கம், வேளச்சேரி, தரமணி, பெருங்குடி, துரைப்பாக்கம், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை  சதுப்பு நிலம் உள்ளிட்ட பகுதிகளில் மாபெரும் தூர்வாரும் பணி நடக்கிறது. இதன்மூலம் இந்த பகுதியில் உள்ள மழைநீர் வடிகால், பெரிய வடிகால்கள், சிறு மற்றும் பெரிய பாலங்களின் நீர் வழித்தடங்கள், மழைநீர் செல்லும் துவாரங்கள், வாகன சுரங்கப்பாதை, நீர்சேகரிக்கும் கிணறு போன்றவை தூர்வாரி சுத்தம் செய்யப்பட உள்ளன.

சென்னை மாநகர கோட்டத்தில் தினமும் 2 பகுதிகள் வீதம் ஒவ்வொரு பகுதியிலும் 200க்கும் மேற்பட்ட பணியாளர்கள், 8 பொக்லைன் இயந்திரங்கள், 8 ஜேசிபி இயந்திரங்கள், ஒரு சூப்பர் சக்கர் கொண்டு தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படுகிறது. அந்தவகையில் நேற்று வேப்பரி இ.வெ.ரா.பெரியார் சாலையில் நடந்த தூர்வாரும் பணியை நெடுஞ்சாலை துறை  கோட்ட பொறியாளர் மற்றும் உதவி கோட்ட பொறியாளர் ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர், பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முகக் கவசம், பாதுகாப்பு கவச உடை, காலணி, கையுறை வழங்கி பாதுகாப்புடன் பணியாற்றும்படி அறிவுறுத்தினர்.

Related Stories:

>