ஊத்துக்காடு ஊராட்சி தலைவர் பதவிக்கு மாமியார்-மருமகள் போட்டி

வாலாஜாபாத்: ஊத்துக்காடு ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு மாமியார், மருமகள் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடந்து வருகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் வரும் 22ம் தேதியாகும்.

அதனால், ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஒன்றிய தலைவர், மாவட்ட கவுன்சிலர், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவிகளுக்கான வேட்பு மனு தாக்கல் சுறுசுறுப்படைந்துள்ளது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட ஊத்துக்காடு ஊராட்சி மன்ற தலைவர் பதவி பொது பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ஊத்துக்காடு கிராமத்தை சேர்ந்த சாவித்திரி மணிகண்டன் (42) போட்டியிடுகிறார்.

இவர், நேற்று வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து, அவரது மாமியார் ஜெயலட்சுமி லோகநாதன் (56) போட்டியிடுகிறார். ஒரே நேரத்தில் மாமியாரும், மருமகளும் வேட்புமனு தாக்கல் செய்ய வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ஜார்ஜ் கீதா என்பவரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இதுவரையில் 3 பெண்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

Related Stories: