வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு கால்வாய், மழைநீர் வடிகால் தூய்மைப்படுத்தும் பணி-அரியலூர் கலெக்டர் துவக்கி வைத்தார்

அரியலூர் : அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்திற்குட்பட்ட வாரணவாசி, பார்பனச்சேரி, மறவனூர், மேலப்பழுவூர் ஆகிய கிராமங்களில் வடகிழக்கு பருவ மழையை எதிர் கொள்ளும் வகையில் கால்வாய், மழைநீர் வடிகால்களில் நடைபெற்று வரும் தூய்மைப்படுத்தும் பணிகளை மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி துவக்கி வைத்து பார்வையிட்டு நேரில் ஆய்வு செய்தார்.

தமிழக முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க வடகிழக்கு பருவமழை எதிர் கொள்ளும் வகையில் கால்வாய், மழைநீர் வடிகால்கள்களை தூய்மைப்படுத்தும் பணிகள் நேற்று முதல் 25ம் தேதி வரை அனைத்து ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக எதிர் வரும் பருவ மழையினால் ஏற்படும் இடர்பாடுகளை தவிர்த்திட ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள அனைத்து மழைநீர் வடிகால்களை 100 சதவீதம் தூர்வாரிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, பெரிய மழைநீர் வடிகால், நடுத்தர மழைநீர் வடிகால் மற்றும் சிறிய மழைநீர் வடிகால் என வகைப்படுத்தி தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

அதன்படி, திருமானூர் ஒன்றியத்திற்குட்பட்ட வாரணவாசி கிராமத்தில் சாலையோரம் மழைநீர் செல்லும் வகையில் ஜெ.சி.பி இயந்திரம் மூலம் மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணியினை துவக்கி வைத்தப்பின் மாவட்ட ஆட்சியர் வடிகால்களில் உள்ள கருவேல மரங்களை அகற்றிடவும், குடியிருப்புகளை சுற்றி பெய்யும் மழைநீரானது இவ்வடிகால்கள் வழியாக விரைவாக வெளியேறவும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

மேலும், பார்பனச்சேரி கிராமத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால்களில் தூர்வாரும் பணிகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் வடிகால்களில் படிந்துள்ள மணல் மற்றும் கழிவுகளை வெளியேற்றிடவும், வெளியேற்றப்பட்ட கழிவுகளிலிருந்து நோய் தொற்றா வண்ணம் அவற்றின்மீது கிருமி நாசினி தெளித்திடவும் அறிவுறுத்தினார். அதனைத்தொடர்ந்து, மறவனூர் மற்றும் மேலப்பழுவூர் கிராமங்களில் வடகிழக்கு பருவ மழையை எதிர் கொள்ளும் வகையில் கால்வாய், மழைநீர் வடிகால்களில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) சுந்தர்ராஜன், கோட்டாட்சியர் ஏழுமலை, வட்டாட்சியர் ராஜமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories:

>