×

திருச்சுழி அருகே 400 ஆண்டு பழமையான சதிக்கல் கண்டெடுப்பு-பள்ளிச்சுவர் கட்ட பள்ளம் தோண்டியபோது சிக்கியது

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகில் புரசலூரில் பள்ளிக்கூட சுற்றுச்சுவர் கட்டுவதற்கு பள்ளம் தோண்டிய போது, ஒரு சிற்பம் வெளிப்பட்டதாக அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி வரலாற்று உதவிப்பேராசிரியர் ரமேஷ், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர் ராஜகுருவிற்கு தகவல் தெரிவித்துள்ளார்.சிற்பத்தை ஆய்வு செய்த தொல்லியல் ஆய்வாளர் ராஜகுரு கூறியதாவது: திருச்சுழி புரசலூரில் கண்டெடுக்கப்பட்டுள்ள சிற்பம் உடன்கட்டை ஏறி இறந்த பெண்ணுக்கு வைக்கப்பட்ட சதிக்கலாகும். போரில் வீரமணம் அடைந்த வீரர்களுக்கு நடுகற்கள் நடப்பட்டு வழிபடும் முறை சங்க காலம் தொட்டு இருந்துள்ளது.

போரிலோ அல்லது வேறு காரணங்களால் கணவன் இறந்தபின் மனைவி உடன்கட்டை ஏறி இறந்த பெண்ணுக்கு நினைவு சின்னங்கள் அமைத்து வழிபடுவது வழக்கம். இவற்றை மாலையீடு, மாலையடி, தீப்பாஞ்சம்மன், மாலைக்காரி, சீலைக்காரி என்று அழைக்கின்றனர். சதி, மாலை ஆகிய சொற்களும் பெண் என்றும் பொருள் உண்டு.புரசலூரில் கண்டெடுக்கப்பட்ட சதிக்கல் 2 1/2 அடி உயரமும், 1 1/2 அடி அகலமும் கொண்டது. இதில், ஆண் வலது கையையும், பெண் இடது கையை தொடையில் வைத்துள்ளனர். ஆண் வலது காலை மடக்கி, இடது காலை தொங்கவிட்டும், பெண் இடது காலை மடக்கி வலது காலை தொங்கவிட்டு அமர்ந்த நிலையில் உள்ளனர்.

ஆண் இடது கையில் கட்டாரி எனும் குத்துவாளையும், பெண் வலது கையில் பூச் செண்டை ஏந்தியுள்ளனர். தலையிலுள்ள கொண்டை ஆணுக்கு வலப்புறமும், பெண்ணுக்கு இடப்புறமும் சரிந்துள்ளது. இருவரும் நீண்ட காதுகளுடன், கழுத்திலும், காதிலும் அணிகலன்கள் அணிந்து காணப்படுகின்றனர். சிற்பத்தின் மேற்பகுதி, கபோதம், கண்டம், கலசங்கள் ஆகிய பகுதிகளுடன் கோவிலின் சாலை விமானம் போன்ற அமைப்பில் உள்ளது.

சிற்பத்தின் கீழ்பகுதியில் காலை தொங்கவிட்டு அமர்ந்த நிலையில் ஊஞ்சலாடும் ஒரு பெண்ணின் சிறிய சிற்பமும் உள்ளது. சதிக்கல் அமைப்பை கொண்டு இது கி.பி.17ம் நூற்றாண்டை சேர்ந்தது எனலாம். இப்பள்ளியின் வடக்குப்பகுதியில் ஏற்கனவே இரு சதிக்கற்கள் மக்கள் வழிபாட்டில் உள்ளது. சென்ற ஆண்டு இவ்வூரில் கி.பி.13ம் நூற்றாண்டை சேர்ந்த பாண்டியர் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

Tags : Tiruchirappalli , Virudhunagar: A sculpture was unearthed while digging a ditch to build a school perimeter wall at Purasalur near Tiruchirappalli in Virudhunagar district.
× RELATED பம்பரம் சின்னம் கிடைத்தால் மகிழ்ச்சி.....