×

பழமை மாறாமல் பொலிவு பெறும் ஜமீன் அரண்மனை-ரூ.2 கோடியில் புதுப்பிக்கும் பணி தீவிரம்

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை பாலையம்பட்டி ஜமீன் அரண்மனையை பழமை மாறாமல் ரூ.2 கோடி மதிப்பில் புதுப்பிக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.ராமநாதபுரம் சமஸ்தானத்தில் இருந்த 14 ஜமீன்களில் பாலையம்பட்டி ஜமீனும் ஒன்று. ஒரு பாளையத்திற்கு தலைமை இடமாக விளங்கியதால் இந்த ஊர் பாலையம்பட்டி என அழைக்கப்படுகிறது. கி.பி.1802ல் ராமாநாதபுரம் சமஸ்தானத்து ராணி பர்வதவர்த்தினி நாச்சியாருக்கு வாரிசு இல்லாததால், புதுமடத்தைச் சேர்ந்த தனது சகோதரியின் இரண்டு புதல்வர்களை தத்தெடுத்து வளர்த்து வந்தார். அவர்களுள் ஒருவரை ராமநாதபுரத்திற்கு மன்னராக முடிசூட்டி வைத்தார். மற்றொருவரை பாலையம்பட்டிக்கு ஜமீன்தாராக நியமித்தார்.

இந்த ஜமீன் கட்டுப்பாட்டில் 18 கிராமங்கள் இருந்தன. இவர், பதவி ஏற்றவுடன் கலைஞர்கள், புலவர்களின் ஆதரவை பெற்றார். தஞ்சை மன்னர் சரபோஜிக்கு நெருங்கிய நண்பராக இருந்தார். மதுரை தமிழ்சங்கம் நிறுவிய பாண்டித்துரை தேவர் இவரது மகன். இவர் வ.உ.சியின் நெருங்கிய நண்பர். பாலையம்பட்டி ஜமீன் அரண்மனை ராமச்சந்திர தேவரால் 17 ஏக்கரில் கட்டப்பட்டது. இங்குள்ள வசந்த மண்டபம் கலை அம்சத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. வெள்ளையர்கள் தங்கி பொழுது போக்குவதற்காக, அவர்கள் விரும்பும் வகையில் அரண்மனை அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டது. கடந்த 1950ல் இந்த அரண்மனை அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.

அன்று முதல் 70 ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி இருந்தது. இந்நிலையில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள புரதான கட்டிடங்கள் மையம் மற்றும் பாதுகாத்தல் பிரிவு சார்பில் பாலையம்பட்டி அரண்மனையை புதுப்பிக்க ரூ.2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது பழமை மாறாமல் அரண்மனையை புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. சிமெண்ட் பயன்படுத்தாமல் சுண்ணாம்பு, மணல், கருப்பட்டி, கடுக்காய் பயன்படுத்தி அரண்மனை புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

மணலுடன் சுண்ணாம்பு, கடுக்காய் உடைத்து ஊற வைத்து நவீன இயந்திரம் மூலம் கலவையாக்கி அரண்மனை முழுவதும் பூசப்படுகிறது. பழைய முறைப்படி சித்துக்கல் வைத்து கட்டப்படுகிறது. அரண்மனை புதுப்பிக்கும் பணி முடிந்தவுடன் தொல்லியியல் துறையில் ஒப்படைத்து பாதுகாக்கப்படும்’ என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Aruppukkottai: Renovation work of Aruppukkottai Palayampatti Zameen Palace at a cost of Rs. 2 crore is in full swing.
× RELATED நகராட்சி சந்தையில் ரூ.2 கோடிக்கு மாடு...