பழநி கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம் மீண்டும் துவக்கம்

பழநி : பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நாள் முழுவதும் அன்னதான திட்டம் மீண்டும் துவங்கப்பட்டுள்ளது.பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நாள் முழுவதும் அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பழநி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா முதல் பரவலின்போது 2020ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி முதல் இத்திட்டம் நிறுத்தப்பட்டது.

அதன்பின், பக்தர்கள் அனுமதிக்கப்பட்டபோது, பொட்டலங்களாக அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் நேற்று முதல் மீண்டும் நாள் முழுவதும் அன்னதான திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் ஒரு பந்தியில் சுமார் 250 பேர் அமர்ந்து சாப்பிட அனுமதிக்கப்பட்டனர். கொரோனா கட்டுப்பாட்டின் காரணமாக சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் தற்போது ஒரு பந்திக்கு 108 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இதுபோல் தமிழக அரசு தங்கத்தேர் வழிபாட்டை அனுமதிக்க வேண்டும். வெள்ளி, சனி, ஞாயிறு தினங்களில் நிறுத்தப்பட்டுள்ள வழிபாட்டை மீண்டும் அனுமதிக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.

Related Stories:

>