கம்பம் பகுதியில் விலை இல்லாததால் செடியிலேயே பறிக்காமல் விடப்படும் தக்காளி

கம்பம் : கம்பம் பகுதியில் போதிய விலை கிடைக்காததால், தக்காளியை செடியிலேயே விவசாயிகள் பறிக்காமல் விடும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதனால், தக்காளி மதிப்பு கூட்டும் தொழிற்சாலை அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர். கம்பம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் மானவாரி நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களில் தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை மூலம் கம்பு, சோளம், எள், தட்டைப்பயிறு, மொச்சை, சூரியகாந்தி உள்ளிட்ட மானவாரி பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

இதன்படி, சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையால் மணிகட்டி ஆலமரம், புதுக்குளம், காட்டுப்பள்ளிவாசல், கோம்பை ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள மானாவாரி நிலங்களில் அவரை, சோளம், மொச்சை, தக்காளி ஆகியவற்றை பயிரிட்டனர். இதில் தக்காளி அதிகமாக பயிரிடப்பட்டது. தற்போது தக்காளி விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ளது.

ஆனால், வரத்து அதிகமானாதால், போதிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் கூறுகின்றனர். ஒரு கிலோ தக்காளியை ரூ.5க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்வதாக தெரிவிக்கின்றனர். இதனால், பறிப்பு கூலி கூட கிடைக்காது என தக்காளியை அறுவடை செய்யாமல் செடியிலேயே விட்டுவிட்டுள்ளனர். செடியிலே தக்காளி பழுத்து வீணாகின்றன. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘போதிய விலை கிடைக்காததால், தக்காளியை அறுவடை செய்யாமல் செடியிலேயே விடுகிறோம். எனவே, தேனி மாவட்டத்தில் தக்காளி மதிப்பு கூட்டும் தொழிற்சாலை அமைத்தால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.

Related Stories:

>