ஒன்றிய அரசை கண்டித்து 51 இடங்களில் திமுக கூட்டணி கட்சியினர் கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்-எம்எல்ஏ பூண்டி கலைவாணன் பங்கேற்பு

திருவாரூர் : ஒன்றிய அரசை கண்டித்து திருவாரூரில் நேற்று திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமையில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் மாவட்டம் முழுவதும் 51 இடங்களில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஒன்றிய பிஜேபி அரசின் விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்கள், பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு, பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பு மற்றும் பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம் உட்பட மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் நேற்று மாநிலம் தழுவிய அளவில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடைபெற்றது. இதனையொட்டி திருவாரூர் மாவட்டத்திலும் தலைமைக் கழகத்தின் அறிவிப்பின்படி ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் கிளை கழகம் என அனைத்து இடங்களிலும் போராட்டம் நடைபெற்றது.

திருவாரூரில் கட்சியின் நகர அலுவலகம் முன் மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான பூண்டி கலைவாணன் தலைமையில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நகர செயலாளர் பிரகாஷ், நகராட்சி முன்னாள் துணை தலைவர் செந்தில், விவசாய தொழிலாளர் அணி மாநில துணை செயலாளர் சங்கர், இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ரஜினி சின்னா, பகுத்தறிவு பேரவை மாவட்ட அமைப்பாளர் கருணாநிதி, தி.க. மாவட்ட தலைவர் மோகன், துணைத்தலைவர் அருண் காந்தி, நகர தலைவர் ராமலிங்கம், மதிமுக கொள்கை விளக்க அணி மாநில துணை செயலாளர் சீனிவாசன், காங்கிரஸ் கட்சி நகர தலைவர் சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் தர்மலிங்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் மாரியப்பன், வி.சி கட்சி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் நிலவன் மற்றும் கூட்டணி கட்சி பொறுப்பாளர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் திருவாரூர் ஒன்றிய திமுக சார்பில் புலிவலத்தில் ஒன்றிய செயலாளர் புலிவலம் தேவா தலைமையில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடைபெற்றது. கொரடாச்சேரி வடக்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய செயலாளர் சேகர் கலியபெருமாள் தலைமையில் பவித்திர மணிக்கத்தில் கருப்புக் கொடி போராட்டம் நடைபெற்றது. தெற்கு ஒன்றியம் சார்பில் கொரடாச்சேரியில் ஒன்றிய செயலாளர் பாலச்சந்தர் தலைமையில் கறுப்புக்கொடி போராட்டம் நடைபெற்றது.

மேலும் திருவாரூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி தலைமையிலும், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழனிவேல் முன்னிலையிலும் கருப்புக் கொடி போராட்டம் நடைபெற்றது.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் முருகானந்தம் தலைமையில் கருப்புக்கொடி போராட்டம் நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வடக்கு மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் வடிவழகன் தலைமையில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடைபெற்றது. இதேபோல் மாவட்டம் முழுவதும் அனைத்து ஒன்றிய, நகர, பேரூர் கழக மற்றும் கிளைக் கழக பகுதிகள் என மொத்தம் 51 இடங்களில் போராட்டம் நடைபெற்றது.

Related Stories:

>