குளித்தலையில் கனமழை 3,000 ஏக்கர் நெல், வாழை நீரில் மூழ்கியது-விவசாயிகள் கவலை

குளித்தலை : குளித்தலை பகுதியில் பெய்த கனமழையால் 3,000 ஏக்கர் நெல், வாழை நீரில் மூழ்கியது.கரூர் மாவட்டத்தில் குளித்தலை, தண்ணீர் பள்ளி, மருதூர், மேட்டு மருதூர், குமாரமங்கலம், கூடலூர், கல்லுப்பட்டி, கோட்டைமேடு, மயிலாடி ஆகிய பகுதிகளில் 3,000 ஏக்கரில் சம்பா நெல், வாழை சாகுபடி செய்யப்பட்ட இருந்தது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு திடீர் பெய்த கனமழையால் காட்டு வாரி பகுதியிலிருந்து வந்த மழைநீர், வடிகால் வசதி இல்லாமல் வயல்களில் புகுந்து குளம் போல் தேங்கியது. இதனால் தண்ணீர் வெளியேற முடியாததால் வயல்களில் சம்பா நெல், வாழை பயிர்கள் நீரில் மூழ்கியதால் அழுகும் அபாயம் உள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ஆண்டாண்டு காலமாக மழைக்காலங்களில் வரும் காட்டு வாரி தண்ணீர், முறையான வடிகால் வசதிகள் இருந்ததால் தங்குதடையின்றி கோட்டைமேடு, மேட்டு மருதூர், குமாரமங்கலம் வழியாக பெட்டவாய்த்தலை வரை காட்டு வாரி வழியாக சென்று கலக்கும். இதனால் எவ்வித தடையுமின்றி தண்ணீர் வடிந்து விடும். தற்போது குமார மங்கலத்தில் பாலவேலை நடைபெறுவதால் குறுகிய குழாய் அமைத்து மாற்றுப்பாதை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குறுகிய குழாய் வழியாக தண்ணீர் செல்ல வழியில்லாமல் 3000 ஏக்கர் நெல் வாழை பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் அபாயம் உள்ளது. குமாரமங்கலம் பாலத்தில் மாற்று பாதைக்கு அமைக்கப்பட்ட குழாய், மழைக்காலம் தொடங்குவதற்கு முன் பெரிய குழாய் அமைத்து தண்ணீர் போக்கிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: