நாகர்கோவில் மாநகராட்சி முழுவதும் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணி தொடக்கம்- 1 வாரம் நடக்கிறது

நாகர்கோவில் : நாகர்கோவில் மாநகராட்சியில் 52 வார்டுகள் உள்ளன. இவற்றில் பல இடங்களில் கழிவு நீர் கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படாமல் இருந்ததால், மழை காலங்களில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுக்கிறது. வீடுகளிலும் கழிவு நீர் புகுந்து விடுகிறது. அக்டோபரில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்பதால், முன்னெச்சரிக்கையாக கழிவு நீர் வடிகால்களை தூர்வாரும் பணியை மாநகராட்சி மேற்கொள்கிறது. அதன்படி மெகா தூர்வாருதல் பணி நேற்று தொடங்கியது. வருகிற 26ம் தேதி வரை 1 வாரம் இந்த பணிகள் நடக்கிறது. அசம்பு ரோடு, டிஸ்லரி ரோடு, பைத்துமால்நகர் உள்பட மாநகராட்சி முழுவதும் கழிவு நீர் கால்வாய், வடிகால்கள் தூர்வாரும் பணி நடைபெறுகிறது.

நாகர்கோவில் ராணித்தோட்டம் பணிமனை அருகே கால்வாய்கள் தூர்வாரும் பணியை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு செய்தார். பின்னர் தம்மத்துகோணம் பகுதில் ஆற்றங்கரையோரம் குப்பைகள் கொட்டாமல் இருக்க தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மரக்கன்றுகளை அமைச்சர் மனோதங்கராஜ் நட்டார். ஆய்வின் போது கலெக்டர் அரவிந்த், மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், மாநகராட்சி இன்ஜினியர் பாலசுப்பிரமணியன், மாநகர நகர் நல அலுவலர் டாக்டர் விஜய சந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் ராஜேஷ், ராஜா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

அமைச்சருடன், திமுக மாநகர செயலாளர் வக்கீல் மகேஷ், இளைஞரணி அமைப்பாளர் சிவராஜ், முன்னாள் மீனவரணி அமைப்பாளர் பசலியான், மாணவரணி சதாசிவம், சந்திரசேகர் உள்ளிட்டோர் உடன் வந்திருந்தனர். இந்த தூர்வாரும் பணியில் தனியார் ஜேசிபி இயந்திரங்கள், கழிவு நீர் ஊர்திகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

Related Stories: