ஏடிஎஸ், மலேரியா கொசுக்கள் பெருக்கம் தடுக்க நடவடிக்கை மழைநீர் வடிகால் மெகா தூய்மைப்பணி தொடக்கம்

நெல்லை : மழைக்காலம்  துவங்குவதை முன்னிட்டு டெங்கு காய்ச்சல் பரப்பும் ஏடிஎஸ் மற்றும் மலேரியா  கொசுக்கள் பெருக்கத்தை தடுக்க 6  நாள் மெகா வடிகால் தூய்மை பணி நேற்று துவங்கியது. விரைவில் துவங்க உள்ள வடகிழக்கு பருவமழையை கருத்தில் கொண்டு  மழைநீர் தேங்குவதை தடுக்கவும், மழையால் ஏடிஎஸ், மலேரியா கொசுக்கள் பெருக்கம்  அடைவதை தடுக்கவும் வரும் 25ம் தேதிவரை 6 நாட்கள் மெகா தூய்மை  பணி நடத்த தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கும் துறை உத்தரவிட்டது.

 இதையடுத்து நெல்லை மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணுசந்திரன் ஆலோசனையின் பேரில், மாநகராட்சி நகர்நல அலுவலர் ராஜேந்திரன்  ஏற்பாட்டில் மேலப்பாளையம் மண்டலத்தில் அனைத்து வகையான மழைநீர் வடிகால்  தூய்மைப்பணி நேற்று துவங்கியது. முன்னதாக இப்பணியில் ஈடுபடும்  சுகாதாரப்பணியாளர்களுக்கு மண்டல நல அலுவலர் சாகுல்அமீது ஆலோசனை வழங்கினார். சுகாதார ஆய்வாளர் நடராஜன் மற்றும் ஆய்வாளர்கள்  முன்னிலையில் வார்டு வாரியாக பணிகள் நடைபெறுகின்றன. பெரிய மற்றும் சிறிய  கழிவுநீர் ஓடைகளில் உள்ள அடைப்புகள் அகற்றப்பட்டன. பொது இடங்களில்  வீசப்பட்டு கிடக்கும் தேவையற்ற பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளும்  அகற்றப்பட்டன. மழைநீர் வடிகால் மீது இருந்த ஆக்கிரமிப்புகளும்  அகற்றப்பட்டன. இப்பணிகள்  தொடர்ந்து வருகிற 25ம் தேதிவரை நடைபெறஉள்ளன.

மேலும் பாதாள சாக்கடைப் பிரிவில் உள்ள இயந்திரங்கள் பழுது நீக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.    இதேபோல் நெல்லை டவுனில் கழிவுநீரோடைகளில் குவிந்துக்கிடந்த மணலை அகற்றி தூய்மைப்படுத்தும் பணியில் மாநகராட்சி தொழிலாளர்கள் ஈடுபட்டனர்்.  இதையொட்டி நெல்லை டவுன் தெப்பகுளம் தெரு, வலம்புரி அம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு வீதிகளில் சுகாதார அலுவலர் முருகேசன், சுகாதார ஆய்வாளர் முருகன் தலைமையில் மாநகராட்சி தொழிலாளர்கள், கழிவுநீரோடைகளில் குவிந்துகிடந்த மணலை அகற்றும் பணிகளில் மாநகராட்சி தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

Related Stories: