பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக நியூசிலாந்தை தொடர்ந்து பாகிஸ்தான் உடனான கிரிக்கெட் தொடரை இங்கிலாந்தும் ரத்து செய்தது!!

லண்டன்: பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தான்-இங்கிலாந்து இடையிலான கிரிக்கெட் தொடர் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. டி20 உலக கோப்பைக்கு முன்னதாக இங்கிாலந்து அணி 16 ஆண்டுகளுக்கு பிறகு அடுத்த மாதம் பாகிஸ்தான் செல்ல திட்டமிட்டு இருந்தது. அங்கு அக்.13, 14 தேதிகளில்  2 டி20 ஆட்டங்களில் இங்கிலாந்து அணி விளையாட இருந்தது. அதே போல இங்கிலாந்து மகளிர் அணியும் பாகிஸ்தான் செல்வதாக இருந்தது. சமீபத்தில் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி முதல் ஒரு நாள் போட்டி தொடங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன் பாகிஸ்தானில் தங்கள் வீரர்களுக்கு பாதுகாப்பு இல்லை என முழு தொடரையும் ரத்து செய்து நாடு திரும்பியது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய செய்தி தொடர்பாளர், ‘ பாதுகாப்பு காரணமாக பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் இருந்து விலகும் நியூசிலாந்து முடிவை புரிந்துக் கொள்கிறோம்.     எங்கள் சுற்றுப்பயணம் குறித்து, பாகிஸ்தானில் உள்ள எங்கள் பாதுகாப்பு குழுவுடன் தொடர்பு கொள்கிறோம். அதன் பிறகு எங்கள் முடிவை இன்னும் 24 முதல் 48 மணி நேரத்தில் அறிவிப்போம்’ என்று கூறி இருந்தது. இந்த நிலையில், பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை ரத்து செய்வதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், எங்கள் வீரர்கள் மற்றும் நிர்வாகிகளின் பாதுகாப்பே முக்கியம். பாகிஸ்தானுக்கு பயணம் செய்வதில் கவலைகள் அதிகரித்து வருவதை நாங்கள் அறிவோம். இந்த முடிவு பாகிஸ்தானுக்கு ஏமாற்றமாக இருக்கும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம், அவர்கள் தங்கள் நாட்டில் சர்வதேச கிரிக்கெட்டை மீண்டும் நடத்த அயராது உழைத்திருக்கிறார்கள். எங்களது இந்த முடிவு பாகிஸ்தான் கிரிக்கெட்டில் ஏற்படுத்தும் தாக்கத்திற்கு நாங்கள் உண்மையாக வருந்துகிறோம் என்று அறிவித்துள்ளது.

Related Stories: