கேரளாவில் 90% பேருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது!: மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தகவல்..!!

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதி பெற்றவர்களில் 90 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டிருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியுள்ளார். ஒரு கோடிக்கும் அதிகமான மக்களுக்கு 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். 100 சதவீதம் தடுப்பூசி இலக்கை கேரள அரசு விரைவில் எட்டும் என வீணா ஜார்ஜ் உறுதிபட தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த 19 மாதங்களுக்கும் மேலாக கொரோனா தொற்று நீடித்து வரும் நிலையில் இரண்டாம் அலை மிகவும் குறைந்து நாட்டின் பல மாநிலங்களில் இயல்பு நிலை திரும்பி உள்ளது.

இருப்பினும் ஒரு சில மாநிலங்களில் கொரோனாவின் தாக்கம் தற்போது வரை தணிந்த பாடில்லை. கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15,692 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை 1 லட்சத்து 67 ஆயிரத்து 8 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 23,683 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் மற்ற மாநிலங்களை விட கொரோனா பரவல் அதிகமாகவே உள்ளது. இது ஒருபுறம் இருக்க, தடுப்பூசி செலுத்தும் பணியும் வேகமாக நடந்து வருகிறது. இந்நிலையில் கேரளாவில் 90 சதவீதம் பேருக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

மக்கள் கொரோனா விதிமுறைகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். கொரோனா தடுப்பூசி போடாதவர்களே மரணத்தைத் தழுவுகிறார்கள். எனவே யாரும் 2 தவணை தடுப்பூசி போட தயங்கக் கூடாது. அதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. கேரளாவை பொறுத்தவரை இரவுநேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுகிழமை ஊரடங்கு உள்ளிட்டவை தொடரும் என்று அம்மாநில அரசால் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

Related Stories: