வட மாநிலங்களில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்!: உ.பி. மீரட் நகரில் மட்டும் 205 பேர் பாதிப்பு..அச்சத்தில் மக்கள்..!!

லக்னோ: உத்திரப்பிரதேசத்தில் மீரட் நகரில் மட்டும் 205 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 54 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்நகரின் முதன்மை மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தாக்கமே இன்னும் குறையாத நிலையில் மற்ற வைரஸ்கள், காய்ச்சல்கள் ஏற்பட்டு வருவது மக்களிடையே மேலும் பீதியை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக மத்தியபிரதேசம், உத்திரபிரதேசம், பிகார், ஹரியானா, மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் அதிவேகத்தில் பரவி வருவதாக மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது. இவற்றில், மத்திய பிரதேசத்தின் இந்தூர் பகுதியில் பல்வேறு மாவட்டங்களிலும் டெங்கு பாதிப்புகள் பதிவாகி வருகின்றன.  

கடந்த 2 நாட்களுக்கு முன்பு 22 டெங்கு பாதிப்புகள் பதிவாகி இருந்தன.  இதனால், மொத்த டெங்கு பாதிப்பு எண்ணிக்கை 225 ஆக உயர்ந்திருந்தது.  இவர்களில் 38 நோயாளிகள் குழந்தைகள் ஆவர். அம்மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக நூற்றுக்கணக்கான குழந்தைகளும், பெரியவர்களும் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உத்திரப்பிரதேசத்தில் மீரட் நகரில் மட்டும் டெங்கு காய்ச்சலால் 205 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 54 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் மீரட் நகரின் முதன்மை மருத்துவ அதிகாரி கூறியுள்ளார்.

இதுதவிர, மற்றவர்கள் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை எடுத்து வருகின்றனர். இதனிடைய மத்தியப்பிரதேசத்தில் 225 பேருக்கும், காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் 20க்கும் மேற்பட்டோருக்கும் டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவிதித்துள்ளது. டெங்கு காய்ச்சலுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து மாநிலங்களும் மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

Related Stories: