கர்நாடகா மாநிலம் அனேகல் அருகே ரயில்வே கேட்டை கடக்க முயன்ற டிப்பர் லாரி மீது விரைவு ரயில் மோதி விபத்து!: அதிஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்..!!

அனேகல்: கர்நாடகா மாநிலம் அனேகல் அருகே ரயில்வே கேட்டை கடக்க முயன்ற டிப்பர் லாரி மீது தஞ்சாவூர் விரைவு ரயில் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. மைசூரில் இருந்து புறப்பட்ட தஞ்சாவூர் விரைவு ரயில் இரவு 9 மணிக்கு பெங்களூருவை கடந்து ஓசூரை நோக்கி வந்து கொண்டிருக்கும் போது அனேகல் மாவட்டம் உஸ்கூர் அருகே விபத்தில் சிக்க நேரிட்டது. அவஹள்ளி ரயில்வே கிராசிங்கை கவன குறைவாக கடக்க முயன்ற டிப்பர் லாரி ஓட்டுநர் ரயில் வருவதை பார்த்து லாரியில் இருந்து குதித்து தப்பியோடினார். இதனால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. ரயில் மோதியதில் லாரி நீண்ட தூரம் இழுத்து செல்லப்பட்டது. ரயில் ஓட்டுநர் துரிதமாக செயல்பட்டு ரயிலை நிறுத்தினார்.

பலத்த மழைக்கு இடையே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரயில்வே ஊழியர்கள் மற்றும் போலீசார், 2 மணி நேரத்தில் உருக்குலைந்து போன லாரியை அப்புறப்படுத்தினர். விபத்தில் ரயில் பயணிகள் காயமின்றி உயிர் தப்பினார்கள். விபத்து காரணமாக குறிப்பிட்ட மார்க்கத்தில் செல்ல வேண்டிய ரயில்கள் ஆங்காங்கே நடு வழியில் நிறுத்தப்பட்டன. எனினும் ரயில் பயணிகளுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்க ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்தது. தஞ்சாவூர் விரைவு ரயில் மீண்டும் புறப்பட்டு சென்ற பிறகு அந்த வழித்தடத்தில் செல்லும் கோவை விரைவு ரயில், மைசூரு - தூத்துக்குடி விரைவு ரயில், எஸ்வந்த்பூர் கண்ணூர் விரைவு ரயில் ஆகியவை இலக்கு நோக்கி புறப்பட்டு சென்றன.

Related Stories:

>