அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு என்பது மிகப்பெரிய புரட்சி: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேச்சு

சென்னை: அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு என்பது ஒரு மிகப்பெரிய புரட்சி என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கூறினார். 7.5 சதவீத சிறப்பு உள் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பொறியியல் படிப்பிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு சேர்க்கை ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின், மாணவர்களுக்கு சேர்க்கை ஆணைகளை வழங்கினார். நிகழ்ச்சியில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, தலைமை செயலாளர் இறையன்பு, உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது: தந்தை பெரியாரின் பிறந்தநாளை சமூக நீதி நாளாக அறிவித்தது மட்டுமில்லாமல், அந்த வழியில் ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிற முதலமைச்சர் 7.5 சதவீதம் என்ற சமூக நீதியை வழங்கி அதற்கான சேர்க்கை ஆணையை வழங்க உள்ளார். வரலாறு சொல்லுகின்ற ஒரு ஆணையாக இது இருக்கும். 7.5 சதவீத இடஒதுக்கீட்டை உடனடியாக அறிவித்தார். அந்தவகையில் இது ஒரு மாடல் நீதி கட்சியாக இதை பார்க்க வேண்டியதாக இருக்கிறது. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கடி ஒன்றை கூறுவார்.

அதாவது, முதலமைச்சர் உழைப்பதில் 10 சதவீதம் நாம் உழைத்தாலே போதும் நல்ல பெயரை எடுத்துவிடலாம் என்பதுதான் அது. நாங்கள் யோசிப்பதை விட இரண்டு மடங்கு அதிகமாக சிந்திக்கிறார் முதல்வர். 7.5 சதவீதம் என்ற அறிவிப்பு ஒரு மிகப்பெரிய புரட்சி. பின்தங்கிய மாணவர்களுக்கு இது மிகவும் உபயோகமாக இருக்கும்.இவ்வாறு பேசினார். இதை தொடர்ந்து, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசியதாவது:அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது என்பது முதல்வரின் சமூக நீதி தத்துவத்தில் உருவான கொள்கை.

தற்போது போட்டிப்போட்டுக்கொண்டு தனியார் பள்ளிகள் பணம் வசூலித்துக்கொண்டு இருக்கிறது. அதனால்தான், 12ம் வகுப்பில் பள்ளியில் முதலாவதாக வந்தால் நேரடியாக அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சேர முடியும் என்ற நிலையை முதல்வர் உருவாக்கியுள்ளார். பொறியியல் கல்லூரிகளில் மட்டும் 15,600 பேருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. 7.5 சதவீதம் என்பது ஒவ்வொரு பிரிவிலும் தனித்தனியாக உண்டு. அண்ணா பல்கலைக்கழகத்தில் 1 சதவீதம் மானவர்கள் தான் படிக்க முடியும் என்ற நிலை மாறி தற்போது 7.5 சதவீதமாக உள்ளது. இவ்வாறு கூறினார்.

* அரசுப்பள்ளி மாணவர்களின் இதயத்தில் முதல்வர் சிம்மாசனமிட்டு அமர்ந்துள்ளார்: ஈரோடு மாணவி நெகிழ்ச்சி

அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர்க்கை ஆணை பெற்ற பின்பு, ஈரோடு மாணவி ஹேமவர்சினி பேசியதாவது:‘அண்ணாந்து பார்க்கும் அண்ணாப்பல்கலைக்கழகத்தில்’ படிப்பு என்பது வெறும் கானல் நீராய் இருந்த எங்கள் வாழ்வில், கை கொடுத்து நிஜமாக்கிய தமிழக அரசுக்கு நன்றி. அரசுப்பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல. பெருமையின் அடையாளம் என வெறும் சொற்களில் மட்டும் இல்லாமல், சாதித்து காட்டிய தமிழக அரசுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். சிறப்பு உள் ஒதுக்கீட்டின் அடிப்படையில் எங்கள் கல்விச்செலவை ஏற்று, எங்கள் வாழ்வை பிரகாசிக்க செய்த தமிழக அரசுக்கு நன்றி. முதல்வர் கோட்டையில் மட்டும் சிம்மாசனமிட்டு அமரவில்லை. அரசுப்பள்ளி மாணவர்களின், இதயத்திலும் சிம்மாசனமிட்டு அமர்ந்துள்ளார். உங்களுக்கு எத்தனை முறை நன்றி சொன்னாலும் ஈடாகாது என்றார்.

Related Stories: