நகராட்சி தேர்தல் நடத்தும் விவகாரத்தில் ஒருநாள் கூட அவகாசம் வழங்க முடியாது: தமிழக மாநில தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழகத்தில், கடந்த 2019ம் ஆண்டு, உள்ளாட்சி தேர்தலை ஊராட்சி ஒன்றிய, கிராமப்புற ஊரக உள்ளாட்சி அமைப்புகள், நகராட்சி அமைப்புகள், மாநகராட்சி அமைப்புகள் என 3 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தலை நடத்துவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில், காஞ்சிபுரம், செங்கப்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம் கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி மற்றும் வேலூர் என புதிதாக உருவாக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களின் வார்டு வரையறை முடிக்கப்படவில்லை என வழக்கு தொடரப்பட்டதால், மேற்கண்ட ஒன்பது மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் கிராமப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி தேர்தலை ஆணையம் நடத்தி முடித்தது.

இந்நிலையில் சங்கர் என்பவர் உச்ச நீதிமன்றத்தில், 2019ம் ஆண்டு ஒரு ரிட் மனுவை தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து, இந்த ஆண்டு செப்டம்பர் 15ம் தேதிக்குள் தமிழகத்தில் நகராட்சி, மாநகராட்சி மற்றும் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள ஒன்பது மாவட்டங்கள் ஆகியவைக்கான உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என கடந்த ஜூன் 23ம் தேதி உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, சூர்யகாந்த் மற்றும் ஹேமா கோலி ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில தேர்தல் ஆணையத்தின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கிருஷ்ணகுமார், நீதிபதிகள் முன்னிலையில் ஒரு தகவலை தெரிவித்தார். அதில், ‘‘புதியதாக உருவாக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களுக்கும் அடுத்த மாதம் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட உள்ளது.

அதேப்போன்று மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்கு அவகாசம் கேட்டதன் அடிப்படையில் தேர்தல் நடத்தப்படும். தற்போது, நான்கு மாதங்களில் நகராட்சி அமைப்புகளுக்கான தேர்தலை கண்டிப்பாக நடத்தி முடிக்கிறோம். அதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்க வேண்டும் என தெரிவித்தார். இதையடுத்து மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் வில்சன் மற்றும் வழக்கறிஞர் இந்திரா ஆகியோர், நகராட்சி அமைப்புகளுக்கு காலஅவகாசம் வழங்க எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என தெரிவித்தனர். இதையடுத்து காட்டமாக கேள்வியெழுப்பிய தலைமை நீதிபதி என்.வி.ரமணா, ‘‘உங்களால் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலை நடத்த முடிகிறது. ஆனால் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாதா. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் பிறப்பிக்கும் எந்த உத்தரவையும் மாநில தேர்தல் ஆணையம் பின்பற்றுவது கிடையாது.

அதனால், நகராட்சி தேர்தல் நடத்தும் விவகாரத்தில் ஒரு நாள் கூட அவகாசம் வழங்க முடியாது. மேலும், தற்போது இந்த விவகாரத்தில் எந்த இடைக்கால உத்தரவையும் நீதிமன்றம் பிறப்பிக்க விரும்பவில்லை. இருப்பினும் காலதாமதற்திற்கான காரணங்களை இரண்டு நாளில் விரிவான புதிய பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை அடுத்த 2 நாட்களுக்கு ஒத்திவைத்தனர்.மேலும் மனுதாரரையும் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

Related Stories: