ஐநா பொதுக்கூட்டத்தில் தீவிரவாதம், பருவநிலை குறித்த விவகாரங்களை இந்தியா எழுப்பும்: நிரந்தர தூதர் திருமூர்த்தி தகவல்

நியூயார்க்: ‘ஐநா பொதுச்சபை கூட்டத்தில் தீவிரவாதம், தடுப்பூசி, பருவநிலை மாற்றம் குறித்த விவகாரங்களை இந்தியா முன்வைக்கும்’ என நிரந்தர தூதர் திருமூர்த்தி கூறி உள்ளார். ஐநாவின் பொதுச்சபை கூட்டம் அமெரிக்காவின் நியூயார்க்கில் கடந்த 14ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பொதுப் பிரச்னைகள் தொடர்பான முக்கிய விவகாரங்கள் இன்று தொடங்க உள்ளன. அமெரிக்க அதிபர் பைடன், உலக தலைவர்களை வரவேற்று தொடக்க உரையாற்ற உள்ளார். அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி வரும் 25ம்தேதி பொது விவாதத்தில் உரை நிகழ்த்த உள்ளார். இதற்கு முன்னதாக, வரும் 24ம் தேதி குவாட் அமைப்பின் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.

ஐநா பொதுக்கூட்டம் குறித்து ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் டி.எஸ்.திருமூர்த்தி அளித்த பேட்டியில், ‘‘இந்த கூட்டம் இந்தியாவுக்கு மிக முக்கியமான ஒன்றாகும். ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா காலூன்றி வரும் நிலையில், பிரதமர் மோடியின் உரையை கேட்க உலக தலைவர்கள் ஆவலாக உள்ளனர். இக்கூட்டத்தில் பருவநிலை மாற்றம் குறித்த விவகாரங்களை இந்தியா முன்வைக்கும்’’ என்றார். முன்னதாக, பருவநிலை மாற்றம் தொடர்பான ஐநா பொதுச் செயலாளர் ஆன்டனியோ குட்டரஸ், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்ட 40 உலக தலைவர்கள் இடையேயான ஆலோசனையில் பருவநிலை மாற்றம் குறித்து விவாதிக்கப்பட்டது்.

* எல்லையில் அமைதி அவசியம்

ஜேபி மோர்கன் இந்தியா முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்று ‘இந்தியாவின் வெளிநாட்டு கொள்கை மற்றும் மூலோபாயத்தை முன்னெடுத்து செல்லுதல்’ என்ற கருப்பொருள் மீது வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் சிரிங்லா பேசுகையில், எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் தற்போதைய நிலையை இருநாட்டு ஒப்பந்தப்படி சீனா கடைபிடிக்க வேண்டும். எல்லையில் அமைதி அவசியம் என்று இந்தியா வலியுறுத்தி வருகிறது. ஆப்கானிஸ்தான் தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது இந்தியாவுக்கும் கவலையளிக்கிறது. சீனா கடந்த ஆண்டு லடாக்கில் எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டை மாற்ற எடுத்த முயற்சியால் எல்லையில் அமைதி கடுமையாக பாதிக்கப்பட்டது. இது போன்று இருநாட்டு ஒப்பந்தத்தை மீறும் நடவடிக்கையால் இதர உறவுகளும் இருநாட்டுக்கிடையே பாதிக்கும். ‘பரஸ்பர மரியாதை, பரஸ்பர விருப்பம், பரஸ்பர உணர்வு’ அவசியம் என்றார்.

Related Stories:

>