சுகேஷ் சந்திரசேகர் ரூ.200 கோடி மோசடி ரோகிணி சிறை கண்காணிப்பாளர் உள்பட 9 பேர் மீது நடவடிக்கை: துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவு

புதுடெல்லி: சிறையில் இருந்தபடியே ரூ.200 கோடி மோசடி செய்த புகாரில் சுகேஷ் சந்திரசேகருக்கு உதவியதாக ரோகிணி சிறை கண்காணிப்பாளர் உள்பட 9 பேர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இரட்டை இலை சின்னம் பெற டிடிவி தினகரனுக்கு உதவுவதாக கூறி தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்று கைதான வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் கடந்த 2017ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு டெல்லி ரோகிணி சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் ரான்பாக்ஸி முன்னாள் விளம்பரதாரர் ஷிவிந்தர் சிங்கின் மனைவி அதிதி சிங்கிடம் ரூ.200 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கடந்த மாதம் ரோகிணி சிறையில் இருந்து கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, அவர் திகார் சிறைக்கு மாற்றப்பட்டார். அங்கிருந்தும் அவர் மிரட்டி பணம் பறிப்பது தெரிய வந்தது.

சிறை அதிகாரிகள் உதவியுடன் ஷிவிந்தரின் மூத்த சகோதரர் மல்விந்தர் மோகன் சிங்கின் மனைவியிடம் ரூ.4 கோடி மோசடி செய்ததாக டெல்லி காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு சுகேஷூக்கு எதிராக புதிய வழக்குப்பதிவு செய்தது. இதையடுத்து அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார். மேலும் சிறையில் இருந்தே அவர் மிரட்டி பலரிடம் பணம் பறித்து இருப்பது தெரிய வந்தது. சென்னையில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்திய போது இதுதொடர்பாக பல்வேறு ஆவணங்கள் மற்றும் சொகுசுகார்கள் சிக்கின. இதையடுத்து அவரது காதலி லீனா மரியாபால் மற்றும் சென்னை நண்பர்கள் கைது செய்யப்பட்டனர். நடிகை ஜாக்குலினிடமும் விசாரணை நடந்தது.

இந்த விவகாரத்தில் இதுவரை கைது செய்யப்பட்ட இரண்டு சிறை கண்காணிப்பாளர்கள் உட்பட 6 சிறை அதிகாரிகளிடம் பொருளாதார குற்றப்பிரிவு மூன்று முறை விசாரணை நடத்தியுள்ளது. இந்த 6 அதிகாரிகள் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த தகவலை டெல்லி சிறைத்துறை இயக்குனர் சந்தீப் கோயல் உறுதிப்படுத்தினார். தற்போது துறை ரீதியாக நடந்த விசாரணை முடிவில் சுகேஷூக்கு உதவியதாக ரோகிணி சிறை கண்காணிப்பாளர், மூன்று துணை கண்காணிப்பாளர்கள், இரண்டு உதவி கண்காணிப்பாளர்கள், ஒரு தலைமை வார்டன் மற்றும் இரண்டு வார்டன் உட்பட 9 அதிகாரிகளை சிறை நிர்வாகம் கண்டறிந்துள்ளது. அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கோரி டெல்லி அரசின் உள்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

Related Stories: