உள்ளாட்சி பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: கூட்டணியில் ‘மெகா’ குழப்பம்; தொகுதி பங்கீட்டில் மீண்டும் சிக்கல்; பாஜ தலைவர்கள் அதிர்ச்சி

சென்னை: உள்ளாட்சி தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து, அதிமுக-பாஜ இடையே நேற்று மாலை 2வது நாளாக மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், திடீரென அதிமுக சார்பில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதனால் கட்சி தொண்டர்களிடையே பெரும் குழப்பம் ஏற்பட்டது. மேலும், தொகுதி பங்கீடு முடியாதநிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்வதில் சிக்கல் எழுந்துள்ளது. தமிழகத்தில், புதிதாக உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல், அடுத்த மாதம் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் கடந்த 15ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளை மறுதினம் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.

ஏற்கனவே, அதிமுக கூட்டணியில் இருந்த பாமக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம், அதிமுக-பாஜ இடையே  சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. காலை மற்றும் மாலை இரண்டு கட்டங்களாக நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை. இந்நிலையில், நேற்று 2வது நாளாக மாலை 5 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக - பாஜ இடையே வார்டு பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், மாபா.பாண்டியராஜன் மற்றும் பாஜ சார்பில் கரு.நாகராஜன், கராத்தே தியாகராஜன், செம்பாக்கம் வேதசுப்பிரமணியம், பலராமன் உள்ளிட்ட சில தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தையின்போது,  செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் குறிப்பிட்ட சில இடங்களை கேட்டு அதிமுக நிர்வாகிகளிடம் பாஜ தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை நேற்று இரவு 7 மணிக்கு மேல் தொடர்ந்தது.

அதிமுக - பாஜ 2ம் கட்ட தலைவர்கள் இடையே பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தபோதே, நேற்று மாலை 6.30 மணிக்கு அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர்களின் பட்டியலை அதிமுக தலைமை கழகம் சார்பில் வெளியிடப்பட்டது. அதன்படி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக நேற்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில், 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான அதிமுக வேட்பாளர்களின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜ தலைவர்கள் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தங்களுக்கு வெற்றிவாய்ப்புள்ள வார்டுகளை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு இருந்த சூழ்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் ஒப்புதலின் பேரில் அதிமுக வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது பாஜ தலைவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவினர் பாஜ வேட்பாளர்களுக்கு ஒத்துழைப்பு அளிப்பார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Related Stories:

>