×

என் பக்க நியாயத்தை காலம் சொல்லும்: ஐ.டி ரெய்டு பற்றி சோனு சூட்

சென்னை: என் பக்கமுள்ள நியாயத்தை காலம் சொல்லும் என வருமான வரித்துறை சோதனை பற்றி நடிகர் சோனு சூட் கூறினார். கொரோனா ஊரடங்கு காலத்தில் சோனு சூட் பல வழிகளில் மக்களுக்கு பணியாற்றினார். குறிப்பாக திடீர் ஊரடங்கால் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர்களை பஸ், ரயில், விமானம் மூலம் சொந்த ஊர்களுக்கு அவர் அனுப்பி வைத்த பணி இந்தியாவின் கவனத்தை ஈர்த்தது. தற்போது அவர் கொரோனாவால் வேலை வாய்ப்பை இழந்தவர்களுக்கு வேலை பெற்றுத் தரும் பணிகளை செய்து வருகிறார். இந்த நிலையில் 4 நாட்களாக அவர் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடந்தது. இதில் அவர் ரூ.20 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து சோனு சூட் கூறியிருப்பதாவது: கடந்த 4 நாட்களாக விருந்தினர்களை (வருமானவரித்துறை அதிகாரிகள்) சந்திப்பதில் பிசியாக இருந்தேன். இப்போது மீண்டும் மக்களுக்கு பணி செய்ய திரும்பி வந்திருக்கிறேன். நீங்கள் எப்போதும் உங்கள் பக்க நியாயத்தை சொல்ல வேண்டியதில்லை. காலம் சொல்லிக் கொள்ளும், இந்திய மக்களுக்கு சேவை செய்ய நான் முழு வலிமையுடனும், இதய பலத்துடனும் இருக்கிறேன். என் விளம்பர பட வருமானத்தை நலிந்தவர்களுக்கு உதவியாக தர சொல்லியிருக்கிறேன். எனது அறக்கட்டளையில் உள்ள ஒவ்வொரு ரூபாயும் மக்களுக்காக காத்திருக்கிறது. மக்களுக்கான பணிவான சேவையில் எனது வாழ்க்கை பயணம் தொடரும். இவ்வாறு சோனு சூட் கூறியுள்ளார்.

Tags : Time will tell my side of the argument: Sonu Suite about the IT raid
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...