6 அதிமுகவினர் உட்பட 9 பேர் எதிராக வாக்களிப்பு அதிமுக ஒன்றிய தலைவர் பதவியிழப்பு: உத்தமபாளையத்தில் பரபரப்பு

உத்தமபாளையம்: தேனி மாவட்டம், உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் அதிமுக - 7, திமுக - 3 என மொத்தம் 10  கவுன்சிலர்கள் உள்ளனர். அதிமுகவைச் சேர்ந்த ஜான்சி வாஞ்சிநாதன்  ஒன்றியத் தலைவராகவும், மூக்கம்மாள் கெப்புராஜ் துணைத்தலைவராகவும் இருந்தனர். ஓராண்டுக்கும் மேலாக யூனியன் கூட்டம்  நடத்தவில்லை என அதிமுக தலைவர் மீது திமுக, அதிமுக கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர். கடந்த மாதம் நடந்த கூட்டத்திலும் தலைவர் கலந்து கொள்ளவில்லை. எனவே, அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு, உத்தமபாளையம் ஆர்டிஓ கவுசல்யாவுடம் மனு வழங்கினர்.

இதையடுத்து ஓட்டெடுப்பு நடத்த சிறப்பு ஒன்றியக்குழு கூட்டம் நடத்தப்படும் என ஆர்டிஓ கவுசல்யா அறிவித்திருந்தார். இதன்படி நேற்று காலை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து, வாக்கெடுப்பில் கலந்து கொள்ள 9 கவுன்சிலர்களும் தயாராக இருந்தனர். ஆனால், முன்னதாகவே ஒன்றியத் தலைவர் ஜான்சி வாஞ்சிநாதன் தேனியில் கலெக்டரை சந்தித்து, சொந்த காரணத்திற்காக பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் அளித்த தகவல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அதே நேரம், உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றுவதற்காக சிறப்பு ஒன்றியக்குழு கூட்டம், ஆர்டிஓ கவுசல்யா தலைமையில் தொடங்கியது. இதில் தலைவரை தவிர, அதிமுகவை சேர்ந்த 6 பேர் உள்ளிட்ட 9 கவுன்சிலர்களும் பங்கேற்று, நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரிப்பதாக கைகளை தூக்கி ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து ஒன்றியத் தலைவர் பதவியை ஜான்சி வாஞ்சிநாதன் இழந்தார்.

* போலீசாருடன் வாக்குவாதம்

வாக்கெடுப்பிற்கு பின்பு அதிமுக கவுன்சிலர்களை வெளியே அனுப்பவில்லை என அதிமுகவினர் சாலை மறியலிலும், போலீசாருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்குச் சென்ற ஏஎஸ்பி ஸ்ரேயா குப்தா இரு கட்சியினரையும் அமைதிப்படுத்தினார்.  நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக கவுன்சிலர்கள் ஒரே காரில் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டனர். இதனிடையே தலைவருக்கு எதிராக வாக்களித்த 6 கவுன்சிலர்களும். ஆதரவாக செயல்பட்ட அதிமுக  மீனவர் பிரிவு சந்திரசேகரன், இளைஞர் இளம்பெண்கள் பாசறை பிரசாத், கெப்புராஜ் ஆகியோரும் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.

Related Stories:

>