சரித்திரத்தின் குப்பைக்கூடைகளில் பாஜவின் தவறான கொள்கைகள் வீசப்படும்: கே.எஸ்.அழகிரி பேச்சு

சென்னை: “சரித்திரத்தின் குப்பைக் கூடைகளில் பாஜ கொண்டு வந்துள்ள தவறான கொள்கைகள் தூக்கி வீசப்படும்” என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார். ஒன்றிய பாஜ அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிற வகையில் தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சென்னை சத்திய மூர்த்தி பவன் முன்பு நேற்று  கருப்புக்கொடி ஏற்றும்  போராட்டம் நடந்தது. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கருப்புக்கொடி ஏற்றினார். இதில் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, ஜெயக்குமார் எம்பி, சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகை, துணை தலைவர் கோபண்ணா, ஹசன் மவுலானா எம்எல்ஏ, மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவ ராஜசேகரன், ரஞ்சன் குமார், முத்தழகன், நாஞ்சில் பிரசாத், அடையாறு துரை, டில்லிபாபு, தகவல் அறியும் உரிமை பிரிவு மாநில துணை தலைவர் மயிலை தரணி, மகளிர் அணி துணை தலைவர் ஆர்.மலர்க்கொடி, மாநில செயலாளர் சுமதி அன்பரசு, திருவான்மியூர் மனோகரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் கே.எஸ்.அழகிரி பேசியதாவது: நாட்டிற்கு வருமானம் வராத நிறுவனங்களை தான் காங்கிரஸ் கட்சி விற்பனை செய்தது. ஆனால் வருமானம் ஈட்டி வருகின்ற ரயில்வே துறை, காப்பீட்டு நிறுவனம், நிலக்கரி சுரங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை பாஜ அரசு விற்பனை செய்து வருகிறது. விரைவில் சரித்திரத்தின் குப்பைக் கூடைகளில் பாஜ அரசு  கொண்டு வந்துள்ள தவறான கொள்கைகள் தூக்கி வீசப்படும். தமிழகத்தின் சிறப்பு என்னவென்றால் ஏழு ஆண்டுகள் மோடி செய்ய முடியாத ஒன்றை  தமிழகத்தில் 100 நாட்களில் மு.க.ஸ்டாலின் செய்துள்ளார். பெட்ரோலின் விலை 3 ரூபாய்  குறைத்துள்ளார். இதை பின்பற்றி பிரதமர் மோடி வரியை படிப்படியாக  குறைத்தால் நமது பொருளாதாரம் மேம்படும். மக்கள் பயனடைவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: