பல மாநிலங்களுக்கு தேர்தல் வரவுள்ளதால் தலிபான், ஆப்கான், பாக். பெயரில் பாஜகவின் அரசியல் விளையாட்டு: மெகபூபா முப்தி குற்றச்சாட்டு

ஜம்மு: பல மாநிலங்களில் தேர்தல் வரவுள்ளதால் தலிபான், ஆப்கான், பாகிஸ்தான் பெயரில் பாஜக அரசியல் விளையாட்டை விளையாடுகிறது என்று மெகபூபா முப்தி குற்றம்சாட்டினார். ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் பேரவை தேர்தல் நடத்தப்படவில்லை. இந்நிலையில், மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தி, பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்டங்களில் ஐந்து நாள் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு ஜம்மு வந்தார்.

அப்போது அவர் கூறுகையில், ‘ஒன்றிய பாஜக அரசானது, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், தலிபான் விவகாரங்களை கையில் எடுத்துக் கொண்டு வாக்குகளை பெறுவதற்காக அரசியல் விளையாட்டு விளையாடுகிறது. லடாக்கில் ஊடுருவியுள்ள சீனாவைப் பற்றி அவர்கள் பேச  மாட்டார்கள்; ஏனென்றால் அந்த நாட்டைப் பற்றி பேசினால் அவர்களுக்கு  வாக்குகள் கிடைக்காது. வாக்குகளை பெறுவதற்காகவும், மக்களை பயமுறுத்தவும்  தலிபான், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் குறித்து பேசுகின்றனர். கடந்த 70 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி செய்த அனைத்து நல்ல பணிகளையும் பாஜக வீணடிக்க உறுதிபூண்டுள்ளது.

தேசிய வளங்களை விற்கத் தொடங்கியுள்ளது. எதிர்க்கட்சிகளின் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகிறது அல்லது பயமுறுத்துகிறது. ஆளும் கட்சி தனது கஜானாவை நிரப்ப அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தி உள்ளது. ஜம்மு - காஷ்மீர் பெரும் நெருக்கடியில் உள்ளது; நாட்டின் நிலையும் அப்படித்தான் உள்ளது. இந்தியாவும், ஜனநாயகமும் அவர்களால் (பாஜக) ஆபத்தில் உள்ளன’ என்றார். முன்னதாக ஜம்முவிற்கு மெகபூபா முப்தி வந்தபோது, ராஷ்ட்ரிய பஜ்ரங் தள் தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

Related Stories: