×

கோவா, இமாச்சலில் 100% ஒரு ‘டோஸ்’ முடிந்த நிலையில் அடுத்த இலக்கு ‘லிஸ்டில்’ பஞ்சாப், உத்தரகாண்ட், உ.பி: பேரவை தேர்தல் நெருங்குவதால் பாஜக வியூகம் அம்பலம்

புதுடெல்லி: அடுத்தாண்டு தேர்தல் நடைபெறவுள்ள கோவா, இமாச்சலில் 100% ஒரு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில், இதேபோல் பஞ்சாப், உத்தரகாண்ட், உத்தரபிரதேசத்திலும் 100 சதவீத இலக்கை முன்னிருத்தி தடுப்பூசி சப்ளை செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் 18 வயதுக்கு மேலான மக்களுக்கு 80 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்ட நிலையில், டெங்கு  போன்ற மர்ம காய்ச்சல் பாதிப்பால் 11 மாநிலங்களில் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த மாநிலங்களில் காய்ச்சல் ஹெல்ப்லைன் எண்களைத் தொடங்கி, போதுமான சோதனைக் கருவிகள், லார்விசிடெஸ் மற்றும் மருந்துகளை இருப்பு வைக்க  ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், மாநில அரசுகளை கேட்டுக்  கொண்டுள்ளார்.

இந்நிலையில், அடுத்தாண்டு தொடக்கத்தில் பேரவை தேர்தல் நடைபெறவுள்ள கோவா, பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களிலும், அதற்கு அடுத்து சில மாதங்களில் குஜராத், இமாச்சல் பிரதேச மாநிலங்களுக்கு முழுமையாக தடுப்பூசி ேபாட ஆளும் பாஜக அரசு வியூகம் வகுத்திருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஒன்றிய சுகாதாரத் துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘பஞ்சாப், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பேரவை தேர்தல் வரவுள்ளதால் தகுதியான அனைத்து மக்களுக்கும் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி போட முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

வரும் அக்டோபர் இரண்டாவது வாரத்திற்குள் ஒரு பில்லியன் டோஸ் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கோவா, சண்டிகர், லட்சத்தீவு, இமாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்கள் ஏற்கனவே 100% முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளன. உத்தரபிரதேசத்தில் குறைந்தது 50% தகுதியான பயனாளிகளுக்கு முதல் டோஸ் போடப்பட்டுள்ளது. கொரோனா மூன்றாவது அலைக்கு முன்னதாக இந்த மாநிலங்களில் தடுப்பூசி முழு அளவில் போட முடிவு செய்யப்பட்டுள்ளது. காரணம், தேர்தல் பிரசார கூட்டங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், நோய் பரவலை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்றார்.  

மேலும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைமை இயக்குனர் பல்ராம் பார்கவா கூறுகையில், ‘திருவிழா போன்ற காரணங்களால் சில மாவட்டங்கள் தொற்று பரவல் அச்சம் நிலவி வருகிறது. இரண்டு டோஸ் தடுப்பூசி போடுவது அவசியம். விழாக்கள் நடத்தப்பட வேண்டுமானால், தடுப்பூசி கட்டாயம் போட்டிருக்க வேண்டும். நாடு முழுவதும் 20% பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியும் போட்டுக் கொண்டனர். 62% பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். மொத்த தடுப்பூசிகளில் கோவிஷீல்டு 89%, கோவாக்சின் 10%, ரஷ்யாவின் ஸ்புட்னிக் - 5 என்ற அளவில் பயன்படுத்தப்பட்டது’ என்று கூறினார்.

Tags : Goa ,Himachal ,Punjab ,Uttarakhand ,BJP ,Assembly , Punjab, Uttarakhand, UP: BJP's strategy exposed as Assembly polls approach, next target on 'list'
× RELATED கோவையில் ஓட்டுக்கு ரூ.2000 பிடிபட்ட பாஜ நிர்வாகி