தி.மலையில் பவுர்ணமி கிரிவலம் ரத்து: அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பவுர்ணமியொட்டி இன்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமி நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுவது வழக்கம். ஆனால், உலகை அச்சுறுத்தும் கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த ஆண்டு மார்ச் முதல் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. அதில், பல்வேறு தளர்வுகளை அரசு படிப்படியாக அறிவித்தபோதும், பவுர்ணமி கிரிவலம் செல்வதற்கான தடை இன்னும் தொடர்கிறது.

இந்நிலையில் புரட்டாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் வரும் இன்று அதிகாலை 5.20 மணிக்கு தொடங்கி, 21ம் தேதி (நாளை) அதிகாலை 5.51 மணிக்கு நிறைவடைகிறது. ஆனால், தொடர்ந்து 19வது மாதமாக இந்த மாதமும் பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. பவுர்ணமியொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.  

கொரோனா கட்டுப்பாடு காரணமாக வாரந்தோறும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் கோயிலில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பவுர்ணமியான இன்று பக்தர்கள் அதிகளவு வருவார்கள் என்பதால் அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய இன்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் கிரிவலம் செல்வதை தடுக்கும் வகையில் கிரிவல பாதையில் ஆங்காங்கே போலீசார் தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories:

>