விருட்சிகாசனத்தில் மாணவி சாதனை

சோமனூர்: சோமனூர் அடுத்த நீலம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவி நேஹாபாரதி (11). இவரது பெற்றோர் தனஞ்செயன் (42), ஜெயந்தி (38). இவர்களுக்கு சனத்குமார் (10) என்ற மகனும் உள்ளார். கோவை மாவட்டம்  சோமனூர் அடுத்த வாகராயம்பாளையத்தில் வசித்து வருகின்றனர். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் தனஞ்செயன் கடந்த 10 ஆண்டுகளாக உடல் முதுகுவலி காரணமாக மருத்துவர்களின் அறிவுரையின்படி, வீட்டிலேயே யோகா உடற்பயிற்சி செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், தந்தையை பார்த்து மகள் நேஹாபாரதி 2 வயது முதலே ஆர்வத்துடன் யோகாவில் மிகுந்த ஆர்வம் கொண்டார். மகளின் ஆர்வத்தை பார்த்த பெற்றோர் யோகா பள்ளியில் சேர்த்தனர். சிறு வயதிலேயே 300க்கும் மேற்பட்ட யோகாசனங்களை கற்று தேர்ச்சி பெற்றுள்ளார். யோகாசனத்தில் கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்ற முயற்சியை நேற்று சிறுமி படிக்கும் பள்ளியில் நிறைவேற்றினார். நேஹாபாரதி விருச்சிகாசனம் செய்து சாதனை படைத்தார்.

கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த விஜேஸ் என்ற மாணவர் கடந்த ஆண்டு 2 நிமிடம் 14 நொடிகள் விருச்சிகாசனம் செய்து கின்னஸ் சாதனை படைத்தார். இவரது சாதனையை சிறுமி நேஹாபாரதி 4 நிமிடம் 47 நொடிகள் விருச்சிகாசனம் செய்து முறியடித்து, கின்னஸ் சாதனை படைத்தார். இந்நிகழ்ச்சி கோவை யோவா யோகா அகாடமி நிறுவனர் சரவணன் தலைமையில் நடந்தது. நேஹாபாரதி விருச்சிகாசனம் செய்ததை உலக சேம்பியன் வைஷ்ணவி ஒருங்கிணைப்பில் வீடியோவில் பதிவு செய்யப்பட்டு, லண்டனில் உள்ள உலக கின்னஸ் சாதனை மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

Related Stories: