வேலூர் அருகே உள்ள மலைக்கிராம மக்களுக்கு தடுப்பூசி செலுத்த டிராக்டரில் சென்ற மருத்துவ குழுவினர்

அணைக்கட்டு: வேலூர் அருகே உள்ள மலைக்கிராமத்திற்கு மருத்துவக்குழுவினர் டிராக்டரில் சென்ற அங்குள்ள மக்களுக்கு தடுப்பூசி செலுத்தினர். வேலூர் மாவட்டம், அணைக்கட்டு ஒன்றியம் அல்லேரி மலைக்கிராமத்தில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு முகாம் நேற்று நடந்தது. ஆனால் மலை அடிவாரத்தில் இருந்து அல்லேரி மலைக்கு செல்ல போதிய சாலை வசதி இல்லை. அம்மலைக்கு செல்ல ஒத்தையடி மண்பாதை உள்ளது. இதில் இரு சக்கர வாகனங்கள் மட்டுமே செல்ல முடியும்.

இதனால் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் குலசேகர் தலைமையில் பெண் செவிலியர்கள் அடங்கிய மருத்துவ குழுவினர் தடுப்பூசி உள்ளிட்ட உபகரணங்களுடன் மலையடிவாரத்தில் இருந்து 7 கி.மீ. தூர கரடு முரடான சாலையில் அல்லேரி மலைக்கிராமத்துக்கு டிராக்டரில் சென்றனர். அம்மலையில் முகாம் அமைத்து, அங்கு ஆர்வமுடன் காத்திருந்த மலைக்கிராம மக்கள் 300 பேருக்கு மருத்துவ குழுவினர் தடுப்பூசி செலுத்தினர். பின்னர், முகாம் முடிந்ததும், மீண்டும் அதே டிராக்டரில் மருத்துவ குழுவினர் கீழே வந்தனர்.

Related Stories: