கடையில் அமர்ந்திருப்பதை கண்டித்து படிக்க சொன்ன தந்தை மீது துப்பாக்கி சூடு: உத்தரபிரதேசத்தில் பயங்கரம்

லக்னோ: உத்தரபிரதேசத்தில் படிக்க சொன்ன தந்தை மீது மகன் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம், மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் லக்னோ அடுத்த சின்ஹட் பகுதியை சேர்ந்தவர் அகிலேஷ் யாதவ் (45). இவரது மகன் அமன் யாதவ் (19) பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை அப்பகுதியில் நடைப்பயணத்திற்கு சென்றுவிட்டு அகிலேஷ் யாதவ் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அவரது வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு கடையில் தனது மகன் அமன் யாதவ் அமர்ந்து இருப்பதைக் கண்டார்.

உடனே தனது மகனை வீட்டிற்கு அழைத்து சென்று, பள்ளித் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் ேதர்ச்சி பெறவில்லை. மீண்டும் 10ம் வகுப்பு மறுதேர்வு எழுதவும் தயாராகாமல் அலட்சியமாக உள்ளாய் என்று திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அமன் யாதவ், வீட்டிற்குள் இருந்த இரட்டை குழல் துப்பாக்கியை எடுத்துவந்து, தனது தந்தையை நோக்கி சரமாரியாக சுட்டான். அப்போது சுதாரித்துக் கொண்ட போதும், அகிலேஷின் தொடையில் எதிர்பாராதவிதமாக குண்டு பாய்ந்தது. ரத்த வெள்ளத்தில் அகிலேஷ் சரிந்ததும், அங்கிருந்த மகன் அமன்யாதவ் தப்பி ஓடிவிட்டான்.

தகவலறிந்த அக்கம்பக்கத்தினர், அகிலேஷ் யாதவை மீட்டு லக்னோ ராம் மனோகர் லோகியா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ்  மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘அகிலேஷ் யாதவை கொல்ல பயன்படுத்தப்பட்ட இரட்டை குழல் துப்பாக்கி, அவரது பெயரில் பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 307 (கொலை முயற்சி) கீழ் வழக்கு பதிவு செய்துள்ேளாம்.

தலைமறைவாக உள்ள அகிலேஷின் மகன் அமன் யாதவை தேடி வருகிறோம்’ என்றார். படிக்க சொன்னதற்காக தந்தையை மகன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம், உத்தரபிரதேத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories:

>