யுடியூப்பில் 88 லட்சம் ரசிகர்கள்

நன்றி குங்குமம் தோழி

செல்லம்மா செல்லம்... என் பேச்சு வெல்லம் தித்திக்குதா... தித்திக்குதா...என்ற ஆருத்ரா படப் பாடலை இசைக் கருவி எதுவும் இன்றி அச்சுஅசலாக பாடுகிறார் அந்த சிறுமி. சென்னை  விருகம்பாக்கம் பாலலோக் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் வர்ஷா ரெஞ்ஜித் என்ற அந்த சிறுமி தான் படத்திலும் பாடலை பாடியுள்ளார்.

‘‘கேரளா மாநிலம் கொல்லம் தான் எனது சொந்த ஊர். அப்பா ரெஞ்சித் வாசுதேவ், இசையமைப்பாளர். மலையாள படங்களில் பாடியுள்ளார். அப்பா பாடகர் என்பதால் வீட்டிலேயே சின்னதாக ஒரு ஸ்டுடியோ இருக்கும். அப்ப எனக்கு மூணு வயசு. அப்பா, ‘நீபாதி நான் பாதி கண்ணே...’ பாடலை பாடி அதை ரெக்கார்டிங் செய்து கொண்டிருந்தார். அதில் வரும் பெண் குரலை நான் பாடினேன்.

அதை ரெக்கார்டு செய்து எனக்கு போட்டுக்காட்டினார். கேட்ட போது எனக்கே என்னோட குரல் பிடிச்சு இருந்தது. அதில் இருந்து எனக்கு பாடகியாக வேண்டும் என்ற எண்ணம் தலைதூக்கியது’’ என்றவர் தொலைக்காட்சி தொடர்களுக்கு டைட்டில் பாடலை பாட ஆரம்பித்துள்ளார். ‘‘இசையமைப்பாளர் ஜெயசந்திரன் அங்கில் அப்பாவோட ஃபிரெண்ட். அவர் 'வானம்பாடி’ என்ற மலையாள தொடருக்கு இசையமைத்தார்.

அவர் தான் என்னை முதன்முதலில் பாடவச்சார். அதனை தொடர்ந்து, 'மெளனராகம்’ சீரியலில் பாடினேன். இதன் மூலம் தான் எனக்கு சினிமாவில் பாடும் வாய்ப்பு கிடைச்சது. பொன்மாணிக்கவேல் அங்கில் படத்தில், மகராசனே.... என்ற பாடலை பாடி இருக்கேன். தமிழ், மலையாளம், இந்தி, அரபி என பல மொழிகளில் 30க்கும் மேற்பட்ட சினிமா மற்றும் ஆல்பம் பாடல்களை பாடியுள்ளேன்.

நான்சி அஜ்ரம் அரபி பாடகரின் ஆல்பத்தில் இருந்து ya tab tab... பாடலை நானே பாடி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தேன். அதை பார்த்த நான்சி அஜ்ரம் எனக்கு பாராட்டு தெரிவித்தார். அவரை சந்திப்பதற்காகவே சவுதி அரேபியா செல்ல இருக்கிறேன்’’ என்றவர் தான் பாடும் பாடல்களை யுடியூப்பில் பதிவு செய்துவருகிறார்.

‘‘பக்தி பாடல்கள், மலைவாழ் மக்கள் தொடர்பான பாடல்களையும் பாடி யுடியூப்பில் பதிவு செய்து வருகிறேன். யுடியூப்பில் மட்டுமே 88 லட்சம் ரசிகர்கள் உள்ளனர். விரைவில் 1 கோடி ரசிகர்களை எட்டுவேன். உண்மையில் நான் முறையாக கர்நாடக சங்கீதம் கற்கவில்லை. இப்போது தான் பயின்று வருகிறேன்.

பாடல் பாடுவது மட்டுமில்லாமல், வீணை, மாண்டலின், உகுலேலே, ஜியோ சரத், கிடார், கஜோ... போன்ற இசைக்கருவிகளையும் இசைப்பேன். பல்வேறு பாடகர்களுடன் இணைந்து இசைக்கச்சேரியில் பாடியிருக்கேன். நவம்பர் 7 மற்றும் 8ம் தேதிகளில் சவுதி அரேபியாவில் நடக்க இருக்கும் கச்சேரியில் பாடகி சித்ரா அம்மாவுடன் இணைந்து பாட உள்ளேன்’’ என்றவர் படிப்பிலும் படு சுட்டியாம்.

‘‘கச்சேரிகள் செய்து வந்தாலும், படிப்பில் நான் கவனம் சிதறியதில்லை. எப்போதுமே முதல் ரேங்க் தான். என்னுடைய இந்த முயற்சிக்கு என் பெற்றோர்களை விட என் பள்ளியின் சண்முகநாதன் சார் பெரும் உதவி செய்திருக்கார். அவர் அளிக்கும் ஊக்கம் தான் என்னால் பல இசைக்கச்சேரி மற்றம் சினிமா பாடல்களை பாட முடிகிறது.

இசைத்துறையில் சிறந்த பாடகி என்ற பெயர் எடுப்பதுடன் தேசிய அளவில் சிறந்த பாடகிக்கான விருதை பெறவேண்டும். அப்புறம் டாக்டராக வேண்டும். பள்ளி சார்பிலும் பல்வேறு இசைக் கச்சேரிகளில் பங்கேற்று மாநில அளவிலான விருது பெற்றுள்ளேன்’’ என்றார் வர்ஷா ரெஞ்ஜித்.

Related Stories: