சித்து தலைமையில் பேரவை தேர்தலா?.. ஹரிஷ் ராவத் கருத்துக்கு காங்கிரசில் எதிர்ப்பு

சண்டிகர்: பஞ்சாபின் 16வது முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி (58) இன்று சண்டிகர் ராஜ்பவனில் பதவியேற்றுக் கொண்டார். இவருடன், துணை முதல்வர்களாக ஓ.பி.சோனி, சுக்ஜிந்தர் எஸ்.ரந்தாவா ஆகியோரும் பதவியேற்றனர். இந்நிலையில், பஞ்சாப் முதல்வர் பட்டியலில் இருந்த காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் சுனில் ஜாகர் கூறுகையில், ‘வரும் சட்டசபை தேர்தலில் மாநில தலைவர்  சித்து தலைமையில் தேர்தல் நடைபெறும் என்று கட்சியின் மேலிட பார்வையாளர்  ஹரீஷ் ராவத் தெரிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

இது, முதல்வரின் அதிகாரத்தை குறைத்து மதிப்பிடுவது போன்றுள்ளது’ என்று கூறினார்.அதேபோல், அகாலி தளம் செய்தித் தொடர்பாளர் மஞ்சிந்தர் சிங் சிர்சா கூறுகையில், ‘பஞ்சாபில்  அடுத்த சட்டமன்றத் தேர்தல் மாநிலத் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து தலைமையில்  நடத்தப்படும் என்று ஹரிஷ் ராவத் கூறியது கண்டிக்கத்தக்கது. இவரது பேச்சு  தலித்துகளுக்கு அவமானத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இவர், தலித்துகளையும்  முதல்வரையும் அவமதித்துள்ளார்’ என்றார்.

மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஆதரவான புதிய முதல்வர் மீது, கடந்த 2018ம் ஆண்டு அமைச்சராக இருந்த போது, ஆபாச உள்நோக்கம் கொண்ட சர்ச்சைக்குரிய செய்தியை அனுப்பியதாக, பெண் ஐஏஎஸ் அதிகாரி குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக பஞ்சாப் பெண்கள் ஆணையம் தானாக முன்வந்து விசாரணை நடத்தியது. அதேபோல், கடந்த 2018ம் ஆண்டில் பாலிடெக்னிக் நிறுவனத்தில் விரிவுரையாளர் பணியிடங்கள் பூர்த்தி செய்த விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

Related Stories: