×

அண்ணா பல்கலையில் இணைப்பு பெற்ற கல்லூரிகள் பட்டியல் வெளியீடு

சென்னை: அண்ணா பல்கலைக் கழகத்தில் இணைப்பு பெற்றுள்ள பொறியியல் கல்லூரிகளின் பட்டியலை அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் இயங்கி வரும் அண்ணா பல்கலைக் கழகம் அகில இந்திய மற்றும் உலக அளவில், தொழில் நுட்பக் கல்வியில் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த பல்கலைக்கழகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சுமார் 500 தனியார் பொறியியில் கல்லூரிகள் இணைப்பு பெற்று இயங்கி வந்தன. அந்த கல்லூரிகள் தொடர்ந்து இயங்க வேண்டும் என்றால் அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக் கழகம்(ஏஐசிடிஇ) அங்கீகாரம் மற்றும் அனுமதி பெற்றுத்தான் இயங்க வேண்டும்.

மேற்கண்ட பொறியியல் கல்லூரிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஏஐசிடிஇ நேரடியாக ஆய்வுகள் மேற்கொண்டு, விதிகளின்படி அடிப்படை வசதிகள், பொறியியல் படிப்புக்கான சோதனைக் கூடங்கள், உபகரணங்கள் இருந்தால் மட்டுமே தொடர் அங்கீகாரம் மற்றும் அந்த கல்லூரிகள் நடத்தும் பட்டப்படிப்புகளுக்கான அனுமதியையும் வழங்கும். இதற்கு பிறகு அந்த கல்லூரிகள் அண்ணா பல்கலைக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும். இந்த நடைமுறையின்படி இயங்கி வந்த சுமார் 500 தனியார் பொறியியல் கல்லூரிகளில் கடந்த சில ஆண்டுகளாக மாணவர்கள் போதிய அளவில் சேரவில்லை.

பொறியியல் படிப்புக்கு ஏற்ற வேலையின்மை, வளாக வேலை வாய்ப்பில் பெரும்பாலான மாணவர்களுக்கு வேலை கிடைக்காமை போன்ற பிரச்னைகளால் தனியார் கல்லூரிகளில் மாணவர்கள் சேர ஆர்வம் காட்டவில்லை. அதேசமயத்தில், கடந்த 10  ஆண்டுகளில் அண்ணா பல்கலைக் கழகத்திலும் வளாக வேலை வாய்ப்பு முகாம்களும் நடத்தப்படவில்லை. அண்ணா பல்கலைக் கழகத்தில் படித்த மாணவர்களில் ஆண்டுக்கு 300 பேர்கூட வேலை வாய்ப்புக்கு தகுதிவாய்ந்தவர்களாக தேறவில்லை என்பதே தனியார் வேலை வழங்கும் நிறுவனங்களின் பதிலாக இருக்கிறது. இதனால் கடந்த ஆண்டே பல கல்லூரிகளில் மாணவர்கள் சேரவில்லை.

அதனால் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் தவிர நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களையும் அந்த கல்லூரிகள் அண்ணா பல்கலைக் கழகத்திடமே திரும்ப ஒப்படைத்தன. இந்நிலையில், இந்த  ஆண்டு சுமார் 2 லட்சம் பொறியியல் இடங்கள் உள்ள நிலையில் சுமார் 1 லட்சத்து 74 ஆயிரம் பேர்தான் விண்ணப்பித்துள்ளனர். அதிலும் 10 ஆயிரம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதனால் இந்த  ஆண்டும் பெரும்பாலான கல்லூரிகளில் மாணவர்கள் சேர மாட்டார்கள் என்று தெரிகிறது. அதனால், 9 தனியார் பொறியியல் கல்லூரிகள் தங்கள் கல்லூரிகளில் இந்த ஆண்டு மாணவர்களை சேர்க்க விரும்பவில்லை என்றும், கல்லூரிகளை மூடப்போவதாகவும் தெரிவித்துள்ளன.

இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு 5 கல்லூரிகள் அனுமதி கேட்டு இதுவரை விண்ணப்பிக்கவில்லை. 2 பொறியியல் கல்லூரிகள் ஒரே கல்லூரியாக இணைக்கப்பட்டுவிட்டன. இது தவிர 5 கல்லூரிகள் ஏஐசிடிஇயிடம் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கவில்லை. இதன்படி 20 பொறியியல் கல்லூரிகள் மூடப்படுகின்றன. இதையடுத்து இந்த ஆண்டு 412 கல்லூரிகள் மட்டுமே அங்கீகாரம் பெற்றுள்ளதாக தெரிகிறது. தற்போது பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கவுன்சலிங் தொடங்க உள்ள நிலையில், அண்ணா பல்கலையில் இணைப்பு பெற்ற கல்லூரிகள், அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளை மாணவர்கள் தேர்வு செய்வதற்கு வசதியாக கல்லூரிகளின் பட்டியலை அண்ணா பல்கலைக் கழகம் தனது இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.


Tags : Anna University , Release of the list of affiliated colleges at Anna University
× RELATED அண்ணா பல்கலைக்கு பொறுப்பு பதிவாளர்