மின்னல் தாக்கி குடிசை எரிந்ததில் மகன் படிப்புக்காக வைத்திருந்த 20 லட்சம் பணம் கருகியது

திருமலை: விவசாயி ஒருவர் தனது மகன் படிப்புக்காக நிலத்தை விற்று ரூ.20 லட்சத்தை குடிசை வீட்டில் வைத்திருந்தார். மின்னல் தாக்கி குடிசை வீடு எரிந்ததில் பணம் முழுவதும் கருகியதால் அந்த குடும்பமே சோகத்தில் மூழ்கியது. ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம் குருபடாகூடம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி. இவரது மகன் மகேஷ். இவர்கள் தங்களுக்கு சொந்தமான குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு ஆந்திராவில் பல இடங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

அதன்படி குருபடாகூடத்திலும் இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது கிருஷ்ணவேணியின் குடிசை மின்னல் தாக்கியதில் தீப்பிடித்து எரிந்தது. அப்போது வீட்டில் இருந்த கிருஷ்ணவேணியும் மகேசும் வீட்டில் இருந்து அவசர அவசரமாக வெளியே வந்ததால் உயிர் தப்பினர். தொடர்ந்து அக்கம், பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் தகவலறிந்த தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை போராடி அணைத்தனர். ஆனால், அதற்குள் தீ மளமளவென குடிசை முழுவதும் பரவி எரிந்தது.

இதில், குடிசை முற்றிலும் எரிந்தது. இந்த தீ விபத்தில் வீட்டில் வைத்திருந்த ₹20 லட்சம் மற்றும் 5 சவரன் தங்க நகைகள் தீயில் எரிந்து கருகியது. இதை பார்த்த கிருஷ்ணவேணியும், அவரது மகன் மகேசும் கதறி அழுதனர். இதுகுறித்து கிருஷ்ணவேணி கூறுகையில், `எனது மகன் மகேஷ் கல்லூரி படிப்பிற்காக கடந்த சில நாட்களுக்கு முன் விவசாய நிலத்தை விற்று ₹20 லட்சத்தை வைத்திருந்தேன். அதுவும் தீயில் எரிந்து சாம்பலானது. எனவே பணம், நகை என அனைத்தும் எரிந்த நிலையில் எனது மகன் படிப்பு செலவிற்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. எங்களுக்கு அரசுதான் உதவி செய்ய வேண்டும்’ என்று கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தார்.

Related Stories:

>