படாளம் மார்க்கெட்டில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

பெரம்பூர்: சென்னை மாநகராட்சி, 6-வது மண்டலத்துக்கு உட்பட்ட புளியந்தோப்பு, பட்டாளம், ஓட்டேரி, பேசின்பிரிட்ஜ் ஆகிய பகுதிகளில் கடந்த ஆண்டு கொரோனா தொற்றால் ஏராளமான மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மேற்கண்ட மண்டலத்தில் மீண்டும் மக்களிடையே தொற்று பரவலை தடுக்க போதிய விழிப்புணர்வு ஏற்படும் வகையில் காவல்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், படாளம் மார்க்கெட் பகுதியில் நேற்று மாலை புளியந்தோப்பு காவல்துறை துணை கமிஷனர் ராஜேஷ் கண்ணா, உதவி கமிஷனர் அழகேசன், சுகாதார துணை ஆணையர் மணிஷ் நாராயணன் பரே, செயற்பொறியாளர் செந்தில்நாதன், இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி உள்பட மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அங்கு முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பின்னர் புளியந்தோப்பு மீன் மற்றும் காய்கறி மார்க்கெட், அம்பேத்கர் கல்லூரி சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் கொரோனா பரவலை தடுக்க அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். அதேபோல் பொது இடங்களில் தனிமனித இடைவெளியை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தினர். படாளம், ஓட்டேரி, புளியந்தோப்பு பகுதிகளில் முகக்கவசம் அணியாமல் சென்ற 50-க்கும் மேற்பட்டோரிடம் நேற்று ஒரே நாளில் ₹15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மார்க்கெட் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் முககவசம் அணியாதவர்கள் மீது கடும் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories:

>