இடைத்தேர்தலில் முதலில் செயல்படுத்த திட்டம்; கேரளாவில் ஆன் லைனில் ஓட்டுப்பதிவு அமலாகிறது: மாநில தேர்தல் ஆணையம் தீவிர ஆலோசனை

திருவனந்தபுரம்: கேரளாவில் வீட்டில் இருந்தபடியே ஆன் லைனில் ஓட்டுப்பதிவு முறையை படிப்படியாக அமல்படுத்த மாநில தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது. இந்தியாவில் ஓட்டுப்பதிவு எண்ணிக்கை அதிகரிக்க ஒன்றிய தேர்தல் ஆணையம் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஓட்டு போடுவது கட்டாயமாக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்ட போது பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த முயற்சி கைவிடப்பட்டது. இதற்கிடையே இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக பீகார், தமிழ்நாடு, மேற்குவங்களம், கேரளா உள்பட மாநிலங்களில் சட்டசபை தேர்தலை, பெரும் சிரமத்திற்கு இடையே ஒன்றிய தேர்தல் ஆணையம் நடத்தியது.

இந்தநிலையில் ஆன் லைன் மூலம் ஓட்டு போடும் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. இதற்கிடையே கடந்த 2010ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் முதன்முதலாக உள்ளாட்சி தேர்தலில் ஆன் லைன் ஓட்டு வசதி ஏற்படுத்தப்பட்டது. ஆனால் மிகவும் குறைந்த எண்ணிக்கையில்தான் ஓட்டுகள் பதிவானது. இதையடுத்து 10 வருடங்களுக்கு பின்னர், கடந்த 2020 ஆண்டு ஆன் லைன் ஓட்டுப்பதிவு முறை முழுமையாக நிறுத்தப்பட்டது. இந்தநிலையில் கேரளாவில் ஆன் லைன் ஓட்டுப்பதிவு முறையை அமல்படுத்துவது குறித்து மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. முதல்கட்டமாக இடைத்தேர்தலில் சோதனை முறையில் நடைமுறைப்படுத்தப்படும்.

அதன்பின்னர் 2025 உள்ளாட்சி தேர்தலில் முழுமையாக அமல்படுத்தப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாநில தேர்தல் ஆணையமும், கேரள டிஜிட்டல் பல்கலைக்கழகமும் ஒப்பந்தம் செய்துள்ளன. ஆன் லைன் ஓட்டுபதிவு முறையை கொண்டு வர வேண்டும் என்றால், தேர்தல் நடத்தை விதியிலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். இதுதொடர்பாக அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தவும் தேர்தல் ஆணையம் தீர்மானித்துள்ளது.

Related Stories: