நெல் கொள்முதல் நிலையங்கள் குறைவா? எடப்பாடி கூறுவது வடிகட்டிய பொய்: எம்ஆர்கே பன்னீர்செல்வம் ஆவேசம்

கடலூர்: தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கடலூரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் குறைவாக உள்ளது என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார். அவர் எங்கு பார்த்தார் என தெரியவில்லை. கடலூர் மாவட்டத்தில் 114 இடங்களில் நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டை விட கூடுதல் ஆகும். கடந்த ஆண்டில் 68 இடங்களில் தான் நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளது.

தற்போது குறுவை பருவத்தில் 64 ஆயிரத்து 150 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் 50 ஆயிரம் டன் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. எனவே எடப்பாடியின் கூற்று வடிகட்டிய பொய். திட்டக்குடி பகுதியில் நெல் கொள்முதல் நிலையங்களே இல்லை என அவர் தெரிவித்து உள்ளார். அங்கு நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன. கடந்த ஆட்சியை ஒப்பிட்டு பார்க்கும்போது கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் மட்டுமில்லாமல் அரசே கூடுதல் விலைக்கு நெல் கொள்முதல் செய்கிறது.

இதனால் விவசாயிகள் அதிகளவில் வரத் தொடங்கி உள்ளனர். பாதுகாப்பு கருதி தார்ப்பாய் உள்ளிட்ட உபகரணங்களும் வழங்கப்படுகிறது. கடந்த ஆட்சியில் இல்லாத வகையில் துறைசார்ந்த அமைச்சர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்படுகிறது. 20 மாவட்ட ஆட்சியர்களுக்கு கூட்டத்தின் வாயிலாக, கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், விவசாயிகளுக்கு கூடுதல் பயன்கள் தரும் வகையில் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொள்முதல் செய்யப்பட்ட நெல் உடனுக்குடன் அரிசி ஆலைகளுக்கு அனுப்பப்பட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>