கேரளா ஓணம் பம்பர் லாட்டரி ரூ12 கோடி பரிசு பெற்றவர் யார்?

திருவனந்தபுரம்: கேரள அரசு லாட்டரியில் ஓணம் பம்பர் ரூ 12 கோடிக்கான குலுக்கல் நடந்து ஒரு நாள் ஆன பிறகும் இதுவரை பரிசு விழுந்த அந்த லாட்டரியை வாங்கியது யார் என்று தெரியவில்லை. கேரள அரசின் ஓணம் பம்பர் லாட்டரி முதல் பரிசாக ரூ 12 கோடி அறிவிக்கப்பட்டது. டிக்கெட் விலை ரூ 300 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இதுதான் கேரள அரசு லாட்டரியில் மிக உயர்ந்த பரிசுத் தொகையாகும்.  தமிழ்நாடு உட்பட பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் பெருமளவு இந்த டிக்கெட்டை வாங்கினர். இம்முறை மொத்தம் 54 லட்சம் டிக்கெட்டுகள் அச்சடிக்கப்பட்டன.

இவை அனைத்தும் கடந்த இரு வாரங்களுக்கு முன்பே விற்று தீர்ந்துவிட்டன. இதன் மூலம் கேரள அரசுக்கு ரூ126 கோடி வருவாய் கிடைத்தது. இந்நிலையில் இதன் குலுக்கல் நேற்று திருவனந்தபுரத்தில் நடந்தது. கேரள நிதியமைச்சர் பாலகோபால் தலைமையில் குலுக்கல் நடைபெற்றது. இதில் முதல் பரிசான ரூ12 கோடி TE 645465 என்ற எண்ணுக்கு கிடைத்தது. முதல் பரிசு விழுந்த இந்த டிக்கெட் கொச்சி திருப்பூணித்துராவில் உள்ள ஒரு கடையில் விற்பனையானது தெரியவந்தது.

எனவே இந்தக் கடையில் டிக்கெட் வாங்கியவர் தான் 12 கோடிக்கான அதிர்ஷ்டசாலியாக இருக்கலாம் என கருதப்படுகிறது. திருப்பூணித்துராவில் உள்ள மீனாட்சி லாட்டரிஸ் என்ற கடையில் தான் இந்த டிக்கெட் விற்பனையாகி உள்ளது. குலுக்கல் நடந்து ஒரு நாள் ஆன பின்னரும் இதுவரை அந்த அதிர்ஷ்டசாலி யார் என தெரியவில்லை. அந்த அதிர்ஷ்டசாலி யார் என்று லாட்டரி கடைக்காரர் தேடி வருகிறார். இதற்கிடையே சமூக இணையதளங்களில் பலரது போட்டோவையும் பயன்படுத்தி இவர் தான் அந்த அதிர்ஷ்டசாலி என்று தவறான தகவல்களும் பரப்பப்பட்டு வருகிறது.

Related Stories:

>