கோடநாடு எஸ்டேட் கணினி ஆபரேட்டர் தினேஷ்குமார் மரணம் குறித்து மீண்டும் விசாரிக்க போலீசார் திட்டம்

நீலகிரி: கோடநாடு எஸ்டேட்டில் கணினி ஆபரேட்டர் தினேஷ் குமார் மரணம் தொடர்பாக மீண்டும் விசாரிக்க தனிப்படை போலீசார் திட்டமிட்டுள்ளனர். ஏடிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான தனிப்படை போலீசார் தினேஷ் குமார் மரணம் தொடர்பாக மீண்டும் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை சம்பவத்தை தொடர்ந்து தினேஷ் குமார் தற்கொலை செய்ததாக முதலில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த கோடநாடு வழக்கு தொடர்பாக கிட்டத்தட்ட 5 மரணங்கள் நடந்துள்ளது. கோடநாடு வழக்கில் முதல் நபராக சேர்க்கப்பட்டுள்ள சயான் விபத்தில் சிக்கும் போது அவருடன் இருந்த அவரது மனைவி, குழந்தை உயிரிழக்கின்றனர். அதற்கு முன்னதாக இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கனகராஜ் சேலத்தில் மரணமடைகிறார். இதற்கிடையே கோடநாடு பங்களாவில் கணினி ஆபரேட்டராக பணிபுரிந்த தினேஷ் குமார் என்பவர் சம்பவம் நடந்த 4 மாதங்களுக்கு பிறகு தற்கொலை செய்து கொள்கிறார்.

இதுபோன்ற 4 மரணங்களை உள்ளடக்கிய இந்த வழக்கினை தற்போது தனிப்படையினர் விசாரிக்கின்றனர். இதில் கனகராஜ், சயான் மனைவி, குழந்தை, தினேஷ்குமார் ஆகிய 4 மரணங்கள் தொடர்பாக தனிப்படையினர் விசாரித்தனர். அவர்கள் சம்மந்தப்பட்டவர்களையும் அழைத்து விசாரித்து வந்த நிலையில் தற்போது தினேஷ் குமார் தற்கொலை வழக்கு தொடர்பாக மீண்டும் காவல்துறையினர் விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த வழக்கை பொறுத்தவரை தற்போது நீலகிரி மாவட்டம் சோலூர்மட்டம் காவல்நிலையத்தில் இந்த வழக்கானது பதியப்பட்டு தற்கொலை என முடிவு செய்யப்பட்டு வழக்கானது முடிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த வழக்கை காவல்துறையினர் எடுத்து விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்கொலை செய்து கொண்ட தினேஷ் குமாரின் தந்தை, சகோதரி உள்ளிட்ட உறவினர்களிடம் விசாரித்துள்ளனர். அதன் அடிப்படையில் இந்த வழக்கை மீண்டும் காவல்துறையினர் எடுத்துள்ளதாக கருதப்படுகிறது.

Related Stories: