மாவட்டத்தில் 1,356 மையங்களில் மெகா முகாம் ஒரேநாளில் 82 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி-ஆர்வமுடன் வந்த பொதுமக்கள்

சேலம் : சேலம் மாவட்டத்தில் 1,356 மையங்களில் நேற்று நடந்த மெகா கொரோனா தடுப்பூசி முகாமில், 82 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி ெசலுத்தப்பட்டது. தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில், நேற்று மாநிலம் முழுவதும் 20 ஆயிரம் இடங்களில் 2ம் கட்டமாக மெகா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடந்தது. சேலம் மாவட்டத்தில் 1,235 வாக்குச்சாவடி மையங்கள், 107 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 12 அரசு மருத்துவமனைகள், சேலம் அரசு மருத்துவமனை, இஎஸ்ஐ மருத்துவமனை என மொத்தம் 1,356 மையங்களில் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பணிக்காக 1,356 கிராம செவிலியர்களும், 1,356 கணினி பணியாளர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர்.

காலை 7 மணிக்கு முகாம் தொடங்கிய நிலையில், ஆதார் அட்டைகளுடன் வந்து பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். பலர் குடும்பம், குடும்பமாக வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டதால், காலை முதலே தடுப்பூசி போடும் பணி விறு, விறுப்பாக சென்றது. மாநகரம், புறநகர், கிராமங்கள் என அனைத்து மையத்திற்கு திரளான முதியவர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசியை போட்டுச் சென்றனர்.

மாநகர பகுதிகளில் உள்ள தடுப்பூசி முகாம்களில் காலை 10 மணி முதல் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டது. பின்னர், அருகில் உள்ள மையங்களில் இருந்து கூடுதலாக பெறப்பட்டு தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், \\”சேலம் மாவட்டத்தில் கடந்த 12ம் தேதி நடைபெற்ற முகாமில் 98 ஆயிரம் பேருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதலாக 1.21 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

தற்போது, 2ம் கட்டமாக நடந்த மெகா தடுப்பூசி முகாமில் 73 ஆயிரம் பேருக்கு செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், முகாம் முடிவில், சேலம் சுகாதார மாவட்டத்தில் 59.212 பேருக்கும், ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில் 23,680 பேருக்கும் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 82,892 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. பொதுமக்களின் ஆர்வத்தால் இலக்கை கடந்து, கூடுதலாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது,’’ என்றனர்.

Related Stories:

>