7.5% இடஒதுக்கீட்டின் கீழ் பி.இ படிப்பில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் கல்விக்கட்டணத்தை அரசே ஏற்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: மாணவர்களின் பொறியியல் கனவு நிறைவேறும் நாள் இன்று என பி.இ மாணவர் சேர்க்கை ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். 7.5% உள்ஒதுக்கீட்டில் பொறியியல் படிப்பை தேர்வு செய்த அரசுப்பள்ளி மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சேர்க்கை ஆணை வழங்குகிறார். அரசுப்பள்ளி மாணாக்கருக்கான 7.5% உள் ஒதுக்கீட்டில் பொறியியல் படிப்பில் இவ்வாண்டு சுமார் 10,000 பேர் பயனடைவர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை எதிர்த்து தமிழ்நாடு அரசு சட்டப்போராட்டம் நடத்தி வருகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

அரசு பள்ளிகளில் பயின்று 7.5% உள்ஒதுக்கீட்டில் பயிலும் மாணவர்களின் கல்விக்கட்டணம், விடுதிக்கட்டணத்தை அரசே ஏற்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்கள் கூட நிச்சயமாக இந்த படிப்புக்கு வர முடியும் என்று சற்று முன்பு பேசிய தலைமை செயலாளர் இறையன்பு தெரிவித்திருந்தார். ஒரு மாணவருக்கு ஒரு ஆண்டுக்கு சராசரியாக ரூ.70,000 முதல் ரூ.80,000 வரை செலவாகிறது. 7.5% ஒதுக்கீட்டில் கால்நடை, சட்டம், வேளாண்மை படிப்புகளில் 300 மாணவர்கள் பயன்பெறுவர் என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார். உயர்கல்வி, தொழிற்கல்வி, ஆராய்ச்சிக்கல்வியின் பொற்காலமாக இந்த ஆட்சி மாற வேண்டும் என்று முதல்வர் கூறியுள்ளார். அமைச்சர்கள் க.பொன்முடிம் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Related Stories: