நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்த அவகாசம் கோரி வழக்கு: 2 நாளில் பிரமாணபத்திரம் தாக்கல் செய்ய மாநில தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்த 4 மாதம் அவகாசம் போதுமானது என உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின்போது தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் விளக்கம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் ஊரக மற்றும் நகர்ப்புற தேர்தல்களை நடத்தி முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. செப்டம்பர் மாதத்திற்குள் தேர்தலை நடத்த முடியாது என்பதால் அக்டோபர் மாதம் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதனிடையே, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க மேலும் ஆறு மாத காலம் அவகாசம் தேவை என்று தமிழக மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. ஏற்கனவே இரண்டு முறை அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் மூன்றாவது முறையாக அவகாசம் கோரியது. இது குறித்து பேசிய அமைச்சர் கே.என் நேரு, புதிய நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டிருப்பதால் வார்டு வரையறை பணிகளுக்கு கால அவகாசம் தேவைப்படுவதாகவும் அதற்காகவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு கால அவகாசம் கேட்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்த 7 மாதம் கூட தேவையில்லை, 4 மாதம் போதும் என்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த ஒரு நாள் கூட அவகாசம் அளிக்க முடியாது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். பின்னர் தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்த 4 மாதம் அவகாசம் போதுமானது என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் விளக்கம் தெரிவித்தது. இதையடுத்து, தேர்தலை நடத்த அவகாசம் கேட்டது பற்றி இரண்டு நாட்களில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.

Related Stories: