அமெரிக்க எல்லையில் ஹைத்தி அகதிகள் தஞ்சம் புகுவதால் பதற்றம்: குதிரைகள் மூலம் ரோந்து பணிகளில் ஈடுபட்டு அகதிகள் தடுத்து நிறுத்தம்

ஹைத்தி: அமெரிக்க எல்லையில் ஹைத்தி அகதிகள் ஆயிரக்கணக்கானோர் தஞ்சம் புகுவதால் அவர்களை தடுத்தி நிறுத்தி திருப்பி அனுப்பும் பணியில் அமெரிக்க பாதுகாப்பு படை ஈடுபட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான ஹைத்தி மக்கள் கியூபா, வெனிசுலா, நிக்ரோவா மக்களோடு சேர்ந்து அகதிகளாக அமெரிக்க எல்லையில் தஞ்சம் புகுந்து வருகிறார்கள். ஹைத்தி அதிபர் படுகொலைக்கு பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் அங்கு மிகப்பெரிய பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

இதையடுத்து அந்நாட்டு மக்கள் கிடைத்த உடைமைகளை எடுத்துக்கொண்டு ரியோ கிராண்டே நதியை கடந்து அமெரிக்காவுக்குள் நுழைய முயன்று வருகின்றனர். அவர்களை அமெரிக்க பாதுகாப்பு படையினர் குதிரைகளில் ரோந்து பணிகளில் ஈடுபட்டு தடுத்து நிறுத்தி வருகின்றனர். சட்ட விரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைய முயல்வோர்களை மீண்டும் மெக்சிகோவிற்கே திரும்பி செல்லுமாறு பாதுகாப்பு அதிகாரிகள் வலியுறுத்துவதாக கூறப்படுகிறது. ஹைத்தி அகதிகள் மீது பாதுகாப்பு படையினர் குதிரைகளை வைத்து அவர்களை இடித்து தள்ளுவது காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.

வேலை மற்றும் பாதுகாப்பிற்காக பலம் பெயர்ந்தோர் அமெரிக்கா நோக்கி சென்ற வண்ணம் இருப்பதால் அவர்களை கையாள்வது அமெரிக்க அரசிற்கு பெரும் சவாலாக உள்ளது. அடிப்படை வசதியின்றி தங்கியிருக்கும் குடியேறிகளை திருப்பி அனுப்பி வைப்பதற்காக ஹைத்தி மற்றும் பிற இடங்களுக்கு விரைவில் விமானங்களை அனுப்ப இருப்பதாக அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை கூறியுள்ளது. மெக்சிகோவுடன் இணைக்கும் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் தற்போது தற்காலிக கூடாரம் அமைத்து அவர்கள் தங்கி உள்ளனர். அடிப்படை வசதியின்றி தவிக்கும் ஹைத்தி அகதிகள் அமெரிக்காவிற்குள் செல்லும் தருணத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Related Stories:

>