18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் அக்டோபர் மாதத்துக்குள் முதல் டோஸ் தடுப்பூசி உறுதி: சுகாதாரத்துறை செயலாளர் தகவல்

சென்னை: தமிழகத்தில் நேற்று மெகா தடுப்பூசி முகாம் காலை முதல் துவங்கியது. இதையொட்டி, ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் நடைபெற்ற தடுப்பூசி முகாமினை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி:  தமிழகத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி 75%, காஞ்சிபுரத்தில் 73 %, திருப்பூரில் 67 %, சென்னையில் 65 % செலுத்தப் பட்டுள்ளது. இரண்டாம் தவணை தடுப்பூசி சென்னையில் 32 சதவீதம், நீலகிரி 29 சதவீதமும், கோவையில் 25 சதவீதம், பூந்தமல்லியில் 23 சதவீதமும் செலுத்தப்பட்டுள்ளது.   

3ம் அலை வராமல் தடுக்க போர்க்கால அடிப்படையில் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 5 சதவீதத்திற்கும் கீழ் உள்ளது. தஞ்சை டெல்டா மாவட்டங்களிலும் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் சென்னை சுற்றி இருக்கக் கூடிய சில பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொற்று அதிகரித்து இருக்கிறது. மாநில அளவில் தமிழ்நாட்டில் தொற்றின் சதவீதம் 1.1 ஆக உள்ளது. தொற்று அதிகம் பரவும் பகுதிகளில் நோய் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வரும் 6 வாரம் தீவிரமான முறையில் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதன் மூலம் நோயை முழுமையாக தடுக்க முடியும். 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் அக்டோபர் மாதத்திற்குள்ளாகவே முதல் டோஸ் தடுப்பூசி செலுத்த தமிழக சுகாதாரத்துறை சார்பில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  இவ்வாறு அவர் கூறினார்.

4.35 கோடி பேருக்கு தடுப்பூசி

சென்னையில் சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி: தமிழகத்தில் 2-வது கட்ட மெகா தடுப்பூசி முகாமுக்கும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இதுவரை மொத்தமாக 4.35 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதில் 4.12 கோடி தடுப்பூசிகளை அரசே செலுத்தி உள்ளது. நேற்றுடன் கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள் தீர்ந்து விட்டது. இந்நிலையில் இன்று கூடுதல் தடுப்பூசிகளை வழங்குமாறு ஒன்றிய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: