சார்ஜாவில் இருந்து சென்னைக்கு கடத்திய ரூ.18.5 லட்சம் தங்கம் பறிமுதல்: ஒருவர் கைது

மீனம்பாக்கம்: சார்ஜாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் ரூ.18.5 லட்சம் மதிப்புள்ள 390 கிராம் தங்கம், மின்சாதன பொருட்கள் கடத்தி வரப்பட்டிருந்தது. அவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, சென்னை பயணியை கைது செய்து விசாரிக்கின்றனர்.  சார்ஜாவிலிருந்து ஏர்அரேபியா ஏர்லைன்ஸ் சிறப்பு விமானம் நேற்று சென்னை சர்வதேச விமானநிலையத்துக்கு வந்தது. அதில் வந்த பயணிகளை விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையை சேர்ந்த 34 வயது ஆண் பயணி ஒருவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி சோதனையிட்டனர்.  அவர் கையில் வைத்திருந்த சூட்கேஸ் மற்றும் பைகளில் ரூ.4 லட்சம் மதிப்பிலான மின்சாதனப் பொருட்களை உரிய ஆவணங்கள் இன்றி மறைத்து வைத்திருந்தார். மின்சாதன பொருட்களை பறிமுதல் செய்தனர்.  

  மேலும் அவர் ஆசனவாயில் மறைத்து வைத்திருந்த தங்கக்கட்டியையும், பேண்ட்டின் ரகசிய அறைக்குள் பதுக்கி வைத்திருந்த தங்க செயினையும் கைப்பற்றினர். அதன் மொத்த எடை 390 கிராம். அதன் சர்வதேச மதிப்பு ரூ.18.5 லட்சம்.  இதையடுத்து, அந்த பயணியிடமிருந்து மொத்தம் ரூ.22.5 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் மின்சாதனப் பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் சென்னை பயணியை கைது செய்து, அவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் இந்த தங்க கடத்தலில் சர்வதேச கும்பலுடன் அவருக்கு தொடர்பு உள்ளதா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>