அசோக் நகரில் அதிகாலை பரபரப்பு அரசு மேல்நிலை பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விபத்து: கார், மின் பெட்டி சேதம்

சென்னை: அசோக் நகரில் அரசு மேல்நிலைப்பள்ளியின் சுற்று சுவர் இடிந்து ஏற்பட்ட விபத்தில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் மின் பெட்டி உடைந்து சேதமடைந்தது. சென்னை அசோக்நகர் 8வது தெருவையில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் அங்கு படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் சுற்றுச்சுவர் சுண்ணாம்பால் கட்டப்பட்டது.  பல ஆண்டுகளாக முறையாக பராமரிப்பு இல்லாமல் இந்த சுற்றுச்சுவர் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக சென்னை முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளியின் சுற்றுச்சுவர் தண்ணீரில் ஊறி மிகவும் பலவீனமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

 இந்நிலையில் நேற்று அதிகாலை அரசு மேல் நிலைப்பள்ளியின் 30 அடி நீளமுள்ள சுற்றுச்சுவர் மட்டும் பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது. இதில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று முற்றிலும் சேதமடைந்தது. அதேபோல், மின்மாற்றி இணைப்பு பெட்டி, கும்பை தொட்டியும் சேதமடைந்தது. அதிகாலையில் இந்த விபத்து நடந்ததால் உயிர் சேதம் ஏற்படவில்லை. அசோக் நகர் போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரம் உடையாமல் மீதமுள்ள சுற்றுச்சுவரின் தரம் குறித்து அரசு பள்ளி உயர் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

Related Stories: