எடப்பாடிக்கு உணவுத்துறை அமைச்சர் பதில் நேரடி கொள்முதல் நிலையங்கள் எதுவும் மூடப்படவில்லை

சென்னை: நேரடி கொள்முதல் நிலையங்கள் மற்றும் சாக்கு தொடர்பாக தமிழக எதிர்கட்சி தலைவர் வெளியிட்ட அறிக்கைக்கு, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பதில் அளித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நெல் கொள்முதல் தொடர்பாக வெளியிட்ட அறிக்கை குறித்தும், சட்டமன்றத்தில் நான் தெரிவித்த பதில் குறித்தும் குறிப்பிட்டு டோக்கன் வழங்கி 15 நாட்களுக்கு மேலாகியும் விவசாயிகள் கொள்முதல் நிலையங்களிலேயே காத்திருப்பதாகவும், நெல் மூட்டைகள் மழையினால் முளை விட்டுள்ளதாகவும் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். கடலூர் மாவட்டத்தில் இயங்கவில்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ள ஆறு ஊர்களில், 5 ஊர்களில் உள்ள கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.

போத்திரமங்களத்தில் மட்டுமே கொள்முதல் நிறுத்தப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் 62,70,400 சாக்குகள் கொள்முதலுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன. 3,51,000 சாக்குகள் கையிருப்பில் உள்ளது. மேலும், கிருஷ்ணகிரி மண்டலத்திலிருந்து கடலூர் மண்டலத்திற்கு 5,00,000 சாக்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நெல்லினைப் பாதுகாப்பாக வைத்திட 1100 தார்ப்பாலின்களும் வழங்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. எதிர்க்கட்சித் தலைவர் செயல்படாமல் உள்ளதாக குறிப்பிட்ட கொள்முதல் நிலையங்கள் செயல்பாட்டிலுள்ளன என்ற உண்மையைத் தெரிந்து புள்ளி விவரங்களை அறிந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

வேளாண் பெருமக்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டு 2021 - 2022 பருவத்திற்கு மாநில அரசின் ஊக்கத் தொகை 12 ஆண்டுகளுக்குப் பிறகு உயர்த்தி வழங்கி உழவர்கள் நலன் காக்கும் அரசாக விளங்கி வருகிறது தமிழக அரசு. எதிர்க்கட்சி தலைவர், இவற்றை எல்லாம் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். அவர் பொத்தம் பொதுவாகச் சொல்லாமல் குறிப்பிட்டுக் கூறவேண்டும் என்று ஏற்கனவே கேட்டுக் கொண்டுள்ளேன்.  எதிர்க்கட்சித் தலைவருக்கு மட்டுமல்ல தொடர்புடைய அனைவருக்கும் நான் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால் மக்கள் நலன் காக்கும் இந்த அரசில் நெல் கொள்முதல் தொடர்பாக ஏதேனும் குறைபாடு இருந்தால் அப்பகுதியின் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் / மண்டல மேலாளர் அல்லது மாவட்ட ஆட்சித் தலைவர் அல்லது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குனர் அல்லது என்னைத் தொடர்பு கொண்டு தெரிவிக்க கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: